காய்கறி விலை இருமடங்கு உயர்வு

அண்ணாநகர்: காய்கறி வரத்து குறைந்துள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.

சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.250க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, சின்னவெங்காயம், பெரியவெங்காயம், பீன்ஸ், அவ ரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடும்பங்களின் மாதாந்திர குடும்ப செலவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.120 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 முதல் ரூ.65 வரையிலும், தக்காளி ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் பீன்ஸ் கிலோ ரூ.70, அவரைக்காய் ரூ.100 முதல் ரூ.120, முருங்கைக்காய் ரூ.100 முதல் ரூ.120, கேரட் ரூ.70, பாகற்காய் ரூ.50, சுரைக்காய் ரூ.50 என பல்வேறு காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சின்ன வெங்காயத்தின் வரத்து வழக்கத்தைவிட கணிசமாக குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் வட மாநிலங்களில் இருந்து வரும் குளிர்கால காய்கறிகளின் வரத்து தொடங்கியுள்ளநிலையில், பட்டாணி கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தினசரி சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். உணவகங்களிலும் காய்கறிகளின் விலை உயர்வு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் காய்கறிகளின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கோயம்பேடு சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.