பம்ப் உற்பத்தியில் உச்சத்தை தொட்டு கோவை நகரம் சாதனை..!

ந்தியா முழுவதுக்கும் தேவையான பம்ப் உற்பத்தியில், 90 சதவீதத்தைத் தொட்டு கோவை நகரம் சாதனை படைத்திருந்தது.

ஆனால் தற்போது, உற்பத்தியானது படிப்படியாக குறைந்து 50 சதவீதமாகிவிட்டது. இதற்கு காரணம், நாட்டின் பிற நகரங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியும், உற்பத்தியும். இருப்பினும் பம்ப் உற்பத்தியில் கோவை வளர்ச்சிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்திய தரத்தில் மட்டுமின்றி, சர்வதேச தரத்திலான பம்ப் மோட்டார்களையும் உற்பத்தி செய்து வருகிறோம்.

2 சதவீதம் ஏற்றுமதி சர்வதேச பம்ப் சந்தையின் மதிப்பு, 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய். இந்தியாவின் பங்கு வெறும், 17 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. உலகநாடுகளின் தேவையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிலிருந்து 2 சதவீத பம்ப்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலான உற்பத்தியானது உள்நாட்டில் வீடு, விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

பம்ப் பயன்பாட்டை இரு வகையாக பிரிக்கலாம். ஒன்று, தண்ணீர் இறைப்பதற்கானவை; மற்றொன்று தொழிற்சாலை பயன்பாட்டிற்குரிய தொழில்நுட்பங்களுடன் கூடியவை.இவற்றில் மதிப்பீட்டு அடிப்படையில் சாதாரண பம்ப்களை விட, தொழில் நிறுவனங்களில் பயன்படும் பம்ப்களின் மதிப்பு 40 சதவீதம் அதிகம். கோவையிலுள்ள நிறுவனங்கள் பல, சாதாரண வகை பம்ப்களை தயாரிக்கின்றன. சில நிறுவனங்கள் மட்டுமே தொழில்நுட்பம் வாய்ந்த தொழிற்சாலைக்குரிய பம்ப்களை தயாரிக்கின்றன.

ஆயில், சகதிகள், கழிவுநீர் அகற்றுதல், கான்கிரீட், மணல் கலவை போன்ற தொழில்நுட்ப தேவை கொண்ட பம்ப்கள் தயாரிப்பானது குறைவாகவே உள்ளது. இதனால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. குழு அமைப்புகோவையில் அடுத்த தலைமுறை தொழில்முனைவோரின் கவனம் தற்போது தொழில்நுட்ப பம்ப் தயாரிப்பதில் உள்ளது. இதை வணிக ரீதியாக மாற்றவும், கோவையின் பம்ப் தொழிற்சாலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்களின் சங்கம்(சீமா) தொழில்நுட்ப குழுவை ஏற்படுத்தியது.இக்குழுவில் இடம் பெற்றுள்ள முருகேசன், பிரசாத், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நவீன தொழில்நுட்ப பம்ப்களை தயாரிக்க அறிக்கை தயாரித்தனர்.

புதிய பம்ப்களை தயார் செய்வதற்கான ஆராய்ச்சியும், ஏற்கனவே உள்ள பம்ப்களை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதற்கான சிபாரிசுகளையும் குழு செய்துள்ளது.மேலும் மூன்று வகையான பம்ப் தயாரிப்பிற்கான நவீன தொழில்நுட்ப சாதனங்களை வாங்கவும், ‘சிடார்க்’ உதவியுடன் தொழில்நுட்ப மையத்தை ஏற்படுத்தவும் 13.5 கோடி ரூபாய் நிதி தேவை என்றும் வரையறுக்கப்பட்டது. ஒப்புதல்மத்திய கனகர தொழில் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த திட்ட அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு, 12.84 கோடி ரூபாய் வழங்கிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, முதற்கட்டமாக அரசின் பங்களிப்பாக, 10.27 கோடி ரூபாய் நிதி அளிக்கவும் அரசு முன்வந்துள்ளது. சர்வதேச அளவிலான சந்தைப்போட்டியினை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக இந்தியப் பொருட்களின் தரத்தை, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியும், மேம்பாட்டு பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.

‘சிடார்க்’ ஆராய்ச்சி மையத்தில் புதிய தொழில்நுட்ப ரீதியிலான பம்ப் தயாரிக்க கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.இந்த ஆண்டு இறுதிக்குள் ‘மாதிரி பம்ப்’ உற்பத்தி செய்யப்படும் என, எதிர்பார்க்கிறோம். இத்திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் தொழில்நுட்ப பம்ப் தயாரிக்க கோவை முழுஅளவில் தயாராகி விடும். புதியதாக தயாரிக்கப்படும் இரு வகை பம்ப்களை, நாட்டின் மிகப்பெரும் நிறுவனங்களுக்கு சப்ளை செய்ய முடியும். தொழில்நுட்ப பம்ப்களின் இறக்குமதியை தவிர்த்து அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்த முடியும்.

மறுமலர்ச்சி’எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமான’ (ஓ.என்.ஜி.சி.,), தேசிய அனல் மின் நிலையம் போன்ற நிறுவனங்களுக்கான பம்ப்களையும் தயாரிக்க முடியும். இந்திய அளவில் பயன்பாட்டிலுள்ள ‘ரெடிமேடு கான்கிரீட்’ தொழிலுக்கும் இந்த பம்ப்கள் பெரும் உதவிகரமாக அமையும். எல்லாவற்றுக்கும் மேலாக, ராணுவ தளவாட பொருட்கள் தயாரிப்பு மையமாக திகழும் கோவை நகரில், கடற்படைக்கு தேவையான பம்ப்களையும் உற்பத்தி செய்ய முடியும்.அதற்கான வடிவமைப்பு, உலோக பரிசோதனை, பம்ப் பரிசோதனைகளையும் மேற்கொள்ள முடியும். கப்பல்களில் பயன்படும் பம்ப்களை கோவையிலிருந்து சப்ளை செய்ய முடியும். புதிய தொழில்நுட்பத்தால் கோவையின் பம்ப் தொழிலில் ஒரு மறுமலர்ச்சி உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.