🔴ரெட் வேண்டாம்… 🔵ப்ளூ தான் வேணும்! சொகுசு பைக் திருடனின் கலர் கண்டிஷன்!

ரெட் வேண்டாம்… புளூ தான் வேணும்… சொகுசு பைக் திருடனின் கலர் கண்டிஷன் — கோவையில் விசித்திரம்!

கோவையில் விலை உயர்ந்த R15 ரக சொகுசு பைக்கை திருடிய மர்ம நபர் ஒருவன், அதன் நிறம் பிடிக்கவில்லை என்பதற்காக மற்றொரு பகுதியில் அந்த பைக்கை நிறுத்தி விட்டு, தனக்கு பிடித்த நீல நிற பைக்கை திருடிச் சென்ற விசித்திர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தி உள்ளது.கோவை, பீளமேடு டைடல் பார்க் அருகேயுள்ள தண்ணீர் பந்தல் சாலையில், கடந்த 1-ஆம் தேதி அதிகாலை சுமார் 3:15 மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சிகப்பு நிற ‘யமஹா R15’  ரக விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவன் திருடிச் சென்று உள்ளான். சிகப்பு நிற பைக்கை திருடிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற அந்த திருடன், அதிகாலை 3:30 மணி அளவில் அவிநாசி சாலையில் உள்ள கோல்டு வின்ஸ் பகுதிக்கு வந்து உள்ளான். அங்கு வந்தவனுக்கு தான் ஓட்டி வந்த சிகப்பு நிற பைக் பிடிக்கவில்லை போலும்!
​உடனடியாக அந்த சிகப்பு நிற பைக்கை அங்கேயே நிறுத்தி விட்டு, அங்கே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு நீல நிற R15 பைக்கை நோட்டமிட்டு, அதை நைஸாகத் திருடிக் கொண்டு பறந்து விட்டான்.
​
காலையில் எழுந்து பார்த்த நீல நிற பைக்கின் உரிமையாளர், தனது பைக் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால், விசித்திரமாகத் தனது வீட்டின் வாசலில் வேறொருவரின் சிகப்பு நிற R15 பைக் நின்று கொண்டு இருப்பதைப் பார்த்து குழப்பம் அடைந்தார். இதனிடையே, பைக் காணாமல் போனது குறித்து தண்ணீர் பந்தல் பகுதி மற்றும் கோல்டு வின்ஸ் பகுதியைச் சேர்ந்த இரு வேறு உரிமையாளர்களும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஒரே காவல் எல்லைக்குள் அடுத்தடுத்து நடந்த இந்த விசித்திர பைக் திருட்டு சம்பவங்கள் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ​சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், சொகுசு பைக்குகளை மட்டுமே குறிவைத்து, அதுவும் பிடித்த நிறத்திற்காக பைக்கை மாற்றித் திருடிச் சென்ற அந்த ‘கலர்புல்’ திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.