ரசாயனம் வைத்து மரங்களை அழிக்கும் சமூக விரோதிகள்

திருநெல்வேலியில் ரசாயனங்களை வைத்து மரங்களை கருக வைக்கும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவது குறித்து இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள்.

திருநெல்வேலி மாநகரில் சாலை விரிவாக்கம், புதிய கட்டுமானங்களுக்காக பழமையான மரங்களை வெட்டி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மரங்களை கருக வைக்க அடிமரத்தில் ரசாயனங்களை வைக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அவ்வாறு ரசாயனங்கள் வைக்கப்பட்ட மரங்கள் நாளடைவில் கருகுவதும், அவற்றை வெட்டுவதுமாக கடந்த சில ஆண்டுகளாக சமூக விரோத செயல்கள் மாநகரில் நடைபெறுவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக, பசுமை மேலப்பாளையம் அமைப்பை சேர்ந்த பக்கீர் கூறியதாவது: கொக்கிரகுளத்தில் இருந்து மேலப்பாளையம் வரை செல்லும் சாலையில் 20 ஆண்டுகள் பழமையான வேப்பமரம், அரச மரம், மருத மரம், மந்தாரை மரம் என்று பல மரங்கள் இருந்தன. 20 முதல் 40 அடி உயர்த்துக்கு வளர்ந்திருந்தன.

முன்பெல்லாம் இப்பகுதியில் நெல் சாகுபடி இருந்தது. தற்போது, விவசாயம் கைவிடப்பட்ட நிலையில் ரியல் எஸ்டேட்காரர்கள் பலர் நிலங்களை கைப்பற்றி வீட்டுமனைகளாக மாற்றி விற்பனைக்கு முயற்சிக்கின்றனர். அவர்களின் நிலங்களுக்குள் இருக்கின்ற மரங்களை வெட்டிவிட்டனர்.

தொடர்ந்து அங்குள்ள சாலையோரத்தில் நிற்கும் மரங்களை நேரடியாக வெட்டினால் பிரச்சினை எழும் என்பதால், மரங்களின் அடிப்பகுதியை சுற்றி கோடாரியால் வெட்டிவிட்டு, அதில் ரசாயனம் கலந்த ஆசிட்டை தடவுகிறார்கள். இதனால் மரம் மெல்ல மெல்ல கருகி, பட்டு விடுகின்றன. பின்னர், அவற்றை எளிதாக வெட்டிவிடுகிறார்கள். இதுகுறித்து உரிய புகைப்பட ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட பசுமைக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியர் உள்ளார். உறுப்பினர் செயலராக மாவட்ட வன அலுவலர் உள்ளார். மேலும் ஒவ்வொரு அரசுத்துறையின் தலைமை அலுவலர்கள் இதில் உறுப்பினராக இருக்கிறார்கள். மரங்களை வெட்டுவதற்கு இக்குழு மட்டுமே அனுமதி அளிக்கிறது. மரங்களை வெட்டுவதில் விதிகளை மீறினாலும் இந்த குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் மரங்கள் மற்றும் சுற்றுச்சூலை பற்றிய ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதனிடையே, மரங்களில் ரசாயனங்களை வைப்பது குறித்து, ஆட்சியர் தலைமையிலான பசுமைக் குழுவில் புகார் தெரிவிக்கவுள்ளதாகவும், மரங்களை பாதுகாத்திடும் தன்னார்வலர்களையும் பசுமைக் குழுவில் இணைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.பழமையான மரங்களை பாதுகாக்கவும், ரசாயனங்கள் மூலம் கருகவைத்து வெட்டும் முயற்சிகளை தடுக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.