பண்டிகைக்கு ரெடியா? களமிறங்கும் 30 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்! 🚌

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல, போக்குவரத்துத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நந்தனம், மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியதாவது: ஆயுத பூஜையை முன்னிட்டு அக்.15 (நாளை) முதல் 18-ம் தேதி வரை, சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 8,764 பேருந்துகளுடன், கூடுதலாக 6,199 சிறப்புப் பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,963 பேருந்துகளும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.5 முதல் 7-ம் தேதி வரை சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15,659 பேருந்துகளும் இயக்கப்படும்.

ஆயுத பூஜை முடிந்த பின்னர், அக்.20, 21 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கக்கூடிய 4,382 பேருந்துகளுடன், கூடுதலாக 4,809 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 9,191 பேருந்துகளும், தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், நவ.9, 10 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கக்கூடிய 4,382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கும் சேர்த்துமொத்தமாக 11,197 பேருந்துகளும் இயக்கப்படும்.

கிளாம்பாக்கத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, கிளாம்பாக்கம் சிஎம்டிஏ காலநிலை பூங்கா அருகில் திறந்தவெளி இடம், மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் என 2 தற்காலிகப் பேருந்து நிலையங்களும், கோயம்பேடு, மாதவரம் என சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், கிளாம்பாக்கம் சிஎம்டிஏ காலநிலை பூங்கா அருகில் திறந்தவெளி இடத்திலிருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

மறைமலை நகர் தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு,திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகளும் இயக்கப்படும்.

பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையத்துக்கு போதுமான இணைப்பு பேருந்துகள் கட்டணமில்லாமல் இயக்கப்படும். அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து போதுமான இணைப்புப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 24 மணி நேரமும் இயக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். இதைத்தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். அதில் ஆம்னி பேருந்துகள் சென்னையில் எந்தெந்த இடத்திலிருந்து இயக்க வேண்டும் என்றும், கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.