தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழ் வம்சாவளி பெண்ணான நவநீதம் பிள்ளை யார்?இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய பிரிவுகளைத் தொடர்ந்து, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைதிக்கான நோபல் பரிசைத் தேர்வுக்குழு நேற்று அறிவித்தது. இதன்படி, அமைதி, சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டதற்காக, நவி பிள்ளை என அழைக்கப்படும் நவநீதம் பிள்ளைக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அமைதிக்கான நோபல் பரிசு பெறும் முதல் தமிழ் வம்சாவளி பெண்மணி என்ற பெருமையை நவநீதம் பிள்ளை பெற்றார். தமிழ்நாட்டில் பிறந்த நவநீதம் பிள்ளையின் தாத்தா பாட்டி, 1890-களில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்தபோது, தென் ஆப்பிரிக்காவின் நடால் மாகாணத்தில் உள்ள கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் வழித்தோன்றல்களான நாராயணசாமி நாயுடு மற்றும் சாந்தமா நாயுடு தம்பதிக்குப் பிறந்த 8 குழந்தைகளில் 5-ஆவது குழந்தைதான் நவநீதம் பிள்ளை. தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் 1941 ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி பிறந்த நவநீதம் பிள்ளையின் தந்தை பேருந்து ஓட்டுநராகவும், தாய் இல்லத்தரசியாகவும் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தனர்.
சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்த காலகட்டத்தில், நவநீதம் பிள்ளையின் பெற்றோர் தங்களது பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினர். இதனால், 1967-இல் தென் ஆப்பிரிக்காவின் நேட்டல் மாகாணத்தில் சட்டம் பயின்ற முதல் பெண் எனவும், அமெரிக்காவின் ஹார்வர்டு சட்டப் பள்ளியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமையையும் பெற்றார் நவநீதம் பிள்ளை.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியான கபி பிள்ளையை நவநீதம் பிள்ளை திருமணம் செய்தார். நிறவெறிக்கு எதிரான போராட்டத்தால் கபி பிள்ளை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். தனது கணவருக்காக வாதாடியது மட்டுமின்றி, தென் ஆப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியாளர்களின் சித்திரவதைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இனவெறிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலாவுக்காகவும் நீதிமன்றத்தில் வாதாடியவர் நவநீதம் பிள்ளை.
1995-இல் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, தென் ஆப்பிரிக்க உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது பாலியல் வன்கொடுமையை இனப்படுகொலையாக அங்கீகரித்தது, கருத்துச் சுதந்திரம், வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வழிவகுத்தது என முன்னோடியாக இருந்தார். 2003 முதல் 2008 வரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், 2008 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஐநா மனித உரிமை ஆணைய தலைவராகவும் பணியாற்றினார். அப்போது, தமிழர்களின் மீது இலங்கை ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் கொடுத்தார். இது தவிர, உலகெங்கிலும் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகத் தீவிரமாக செயல்பட்டார். பாலஸ்தீனத்தில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்த சர்வதேச ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார். அப்போது, காசாவில் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை நிகழ்த்தியதாக அறிக்கை அளித்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இனவெறி, பாலின பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடும் நவநீதம் பிள்ளைக்குத் தற்போது அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
ஜெர்மனியின் நியூரம்பெர்க் (Nuremberg) நகரில் உள்ள நீதிமன்றத்தில் இருந்த நவநீதம் பிள்ளையிடம் நோபல் பரிசு கிடைத்தது குறித்துத் தெரிவித்தபோது, சற்றும் எதிர்பார்க்கவில்லை என கூறினார். இன்னும் சற்று அதிகமாகக் கைதட்டினால், இந்தப் பரிசைத் டிரம்புடன் பகிர்ந்து கொள்ளக்கூடும் என நகைச்சுவையுடன் நவநீதம் பிள்ளை குறிப்பிட்டார்.







