இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு விருது

கடந்த மாதம் 30ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு 172 பயணிகள் மற்றும் விமானிகள் குழுவுடன் சென்ற ஃபிளைதுபாய் நிறுவனத்தின் விமானத்தை ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி என்பவர் கடத்துவதற்காக இந்திய தலைமை விமானி ஸ்மித் மச்சாரை கொடூரமாக தாக்கினார். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய நிலையிலும் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் மன உறுதியோடு போராடி சகபயணிகள் உதவியுடன் துணை விமானியை சிறை பிடித்து விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க உதவினார். விமான பயணிகளின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சக விமானியால் நடத்தப்பட்ட தாக்குதலை முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு குடிமக்களுக்காக இஸ்ரேலியன் என்ற நாட்டின் மிக உயரிய வீரதீர விருதை வழங்க உள்ளதாக இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார். ஜெருசலேமில் அதிபர் இல்லத்தில் நடந்த விழாவில் பேசிய அதிபர் ஹெசார்க், ” மச்சாரின் அசாத்தியமான துணிச்சல், வீரம் மற்றும் சிறந்த தொழில்முறை அணுகுமுறை ஆகியவை இந்த மாபெரும் விபத்தை தவிர்க்க உதவின. இஸ்ரேல் மக்களின் சார்பாக இஸ்ரேல் அரசின் குடிமக்களுக்கான வீரதீர செயலுக்கான உயரிய விருதான அதிபர் விருது அவருக்கு வழங்கப்படும் என்றார்.