நல்லெண்ணெய் விலை உயர்வு

சமையலுக்கு முக்கிய பங்கு வகித்து வரும் நல்லெண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. லிட்டர் ரூ.365க்கு விற்றது ரூ.410 வரை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதமாக அரிசி, மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து அந்த பட்டியலில் காய்கறிகளும் சேர்ந்து கொண்டுள்ளது. தொடர் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், பட்ஜெட்டில் எதிர்பார்த்ததை விட அதிக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது எண்ணெய் விலையும் அதிரடியாக உயர தொடங்கியுள்ளது.

எண்ணெய் வித்துப் பயிர்களில் அதிக அளவில் நுகர்வு பொருட்களாக உள்ளவற்றில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, தேங்காய் ஆகியவை பிரதான இடம் பிடிக்கின்றன. இதில் உடல் சூட்டைக் குறைத்து, உடலுக்கு நன்மை பயக்கும் நல்லெண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. நல்லெண்ணெய் எள்ளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. எள் நம் நாட்டு எண்ணெய் வித்துப் பயிர் என்பதால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாது. நாடு முழுவதும் தமிழகம், ராஜஸ்தான், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா என குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே அதிக அளவில் எள் பயிரிடப்படுகிறது.

தமிழகத்தில் ஈரோடு, விழுப்புரம், கரூர், திருச்சி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே ஆண்டுதோறும் ஏறத்தாழ 1.50 லட்சம் ஏக்கரில் பல்வேறு பருவங்களில் எள் பயிரிடப்படுகிறது. விதைத்து 85 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு வரும் இந்த பயிருக்கு சாகுபடி செலவும், தண்ணீரும் அதிகம் தேவையில்லை. ஏக்கருக்கு ஏறத்தாழ 300 முதல் 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் எள் விளைச்சல் சரிந்துள்ளது. வெளி மாநில வரத்தும் எதிர்பார்த்த அளவு இல்லாததால் மார்க்கெட்டுக்கு வரத்து சரிந்து அதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் எள்ளை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு, ரூ.45 வரை உயர்ந்துள்ளது. பிரபல நிறுவன தயாரிப்பு நல்லெண்ணெய் ரூ.365க்கு விற்றது தற்போது ரூ.410 வரை உயர்ந்துள்ளது.

சூரியகாந்தி எண்ணெய்யை பொறுத்தவரை, இந்தியாவின் தேவைக்கு, 60 சதவீதம் வரை ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் அதன் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சூரிய காந்தி எண்ணெய்யின் விலையும் அதிகரித்துள்ளது. அதாவது சூரியகாந்தி எண்ணெய் ரூ.165லிருந்து ரூ.190 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளை மேலும் கவலையடைய செய்துள்ளது. வரும் நாட்களில் ஆயுத பூஜை, தீபாவளி என்று தொடர்ந்து பண்டிகை நாட்கள் வருகிறது. இதனால், இந்த நேரத்தில் நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்  விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.