அண்ணன் சீர் திட்டத்தில் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும், பட்டு புடவையும் வழங்க திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. அதேபோல இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். திட்டத்திற்கான வெப்சைட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, “தமிழர் மரபில் திருமணத்தின் போது அண்ணன் வழங்கும் சீர் என்பது அன்பு, பாசம், பாதுகாப்பு மற்றும் பொறுப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணங்களில் மணப்பெண்களுக்கு அரசு, அண்ணனாக பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் எப்போதும் அக்கறை கொண்டு துணை நிற்கும் என்ற உறுதியை வெளிப்படுத்தும் விதமாக.. புதிய வாழ்க்கையை தொடங்கும் மணப்பெண்களுக்கு அன்பு பரிசாக, 8 கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசின் தொலைநோக்கு ஆவணத்தின் ஒரு திட்டம் ஆகும்.
தமிழ்நாட்டில் ரூ. 2.5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு திருமணத்தின்போது 8 கிராம் தங்க நாணயமும் ஒரு பட்டுப்புடவையும் வழங்கும் அண்ணன் சீர்திருத்தத்தை ஆண்டுதோறும் செயல்படுத்த நிர்வாக அனுமதியும், இதற்கான தொகையை நடப்பு நிதி ஆண்டில் முதல் கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடைபெறும் திருமணங்களுக்கு, தமிழ்நாட்டை சேர்ந்த தகுதி உடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் 22 காரட் தங்க நாணயமும் ஒரு பட்டுப் புடவையும் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கு தகுதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.
தமிழ்நாடு திறந்தவெளி ஒப்பந்த புள்ளி சட்டம் 1998 மற்றும் விதிகள் 2000ன்படி திறந்த வெளி ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயமும் பட்டுப் புடவையும் கொள்முதல் செய்யப்படும்.
தங்க நாணயத்தின் கொள்முதல் விலை, கொள்முதல் ஆணை வழங்கப்படும் நாள் அன்று காலை ஐபிஜேஏ அமைப்பால் நிர்ணயிக்கப்படும் விலை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும்.
இந்த திட்டம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும். இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.








