20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026, ஜப்பானின் ஆய்ச்சி-நகோயா பகுதியில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
இந்தியா 21 தங்கம் உட்பட ஏராளமான பதக்கங்களைக் குவித்தது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 இன்றுடன் நிறைவடைந்தன.
இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி மற்றும் 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில், பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
‘2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவடையும் இவ்வேளையில், நமது தேசத்தை உறுதி, பேரார்வம் மற்றும் அபாரமான விளையாட்டு உணர்வுடன் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது பாராட்டுகள்.
தங்கள் செயல்பாடுகளால் தேசத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொண்டு வந்த, பதக்கம் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் போட்டிகள் வரும் ஆண்டுகளில் இன்னும் பெரிய சாதனைகளுக்கு உத்வேகம் அளிக்கட்டும். அவை அடிமட்ட அளவிலும் விளையாட்டை வலுப்படுத்த பங்களிக்கட்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.









