கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் முடிந்து 3 நாட்கள் ஆன பிறகும் அந்த கோடீஸ்வர அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியவில்லை.கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் இவ்வருடம் முதன்முதலாக ரூ. 30 கோடி முதல் பரிசு என அறிவிக்கப்பட்டது. குலுக்கலுக்கு ஒரு நாள் முன்பே 90 லட்சம் டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இதன் மூலம் கேரள அரசுக்கு ரூ. 450 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி திருவனந்தபுரத்தில் இந்த ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு TL 360615 என்ற எண்ணுக்கு விழுந்தது. இந்த லாட்டரி கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பு பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆனால் குலுக்கல் முடிந்து 3 நாட்கள் ஆன பிறகும் அந்த கோடீஸ்வர அதிர்ஷ்டசாலி யார் என்று இதுவரை தெரியவில்லை. சமீப காலமாக கேரளத்தில் லாட்டரியில் பெரிய தொகை பரிசாக கிடைத்தால் அதை யாரும் வெளியே சொல்வதில்லை. பணம் கேட்டு வருபவர்களின் தொல்லை அதிகரித்தது தான் இதற்கு காரணமாகும். கடந்த சில வருடங்களுக்கு முன் ஓணம் பம்பர் லாட்டரியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான அனூப் என்பவருக்கு முதல் பரிசு ரூ. 25 கோடி கிடைத்தது. இதன்பிறகு பணம் கேட்டு ஏராளமானோர் இவரது வீட்டை நோக்கி படையெடுத்ததால் இவரால் வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த காரணத்தால் தற்போது பரிசு விழுந்துள்ள அந்த அதிர்ஷ்டசாலி தன்னுடைய விவரங்களை ரகசியமாக வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.








