தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாகச் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அவசியமான உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அரிசி விலை கிலோவுக்கு ரூ.40 வரை உயர்ந்துள்ள நிலையில், இதன் நேரடித் தாக்கம் ஹோட்டல் உணவுகளின் விலையிலும் எதிரொலிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் சர்க்கரை விலை அதிகரிப்பு காரணமாக டீ, காபி மற்றும் இனிப்பு வகைகளின் விலைகள் உயர்ந்திருந்தன.
தற்போது அரிசி, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உணவகங்களில் தயாரிக்கப்படும் இட்லி, தோசை, மதிய உணவு மற்றும் பிரியாணி உள்ளிட்ட அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு உணவக உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுடன் ஹோட்டல் உணவுகளின் விலையும் உயர்ந்தால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் மாத பட்ஜெட் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.








