வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

கிரீன்பீல்டு சர்வதேச அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் நமன் திர் (26 வயது) அறிமுகமானார். வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர்கள் ஜான் கேம்ப்பெல் – ஜஸ்டின் கிரீவ்ஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 19.2 ஓவரில் 135 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.

கேம்ப்பெல் 62 ரன் (60 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), கீசி கார்ட்டி 13, கேப்டன் ஹோப் 12 ரன்னில் வெளியேறினர். சதம் விளாசி அசத்திய கிரீவ்ஸ் 101 ரன் எடுத்து (108 பந்து, 12 பவுண்டரி) குல்தீப் சுழலில் அவுட்டானார். அடுத்து வந்த ஆண்ட்ரூ 0, சேஸ் 24, போர்டே 7 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்தது. அமிர் ஜாங்கூ 58 ரன், குடகேஷ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 10 ஓவரில் ஒரு மெய்டன் உள்பட 40 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். பிரசித் 2, நிதிஷ் குமார் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 296 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித், கேப்டன் கில் இணைந்து துரத்தலை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12 ஓவரில் 74 ரன் சேர்த்தது. ரோகித் 32 ரன் எடுத்து அவுட்டானார். கில் – கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 151 ரன் சேர்க்க, இந்திய அணி வெற்றி உறுதியானது.

கில் 110 ரன் (108 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அபாரமாக விளையாடிய கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் தனது 55வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இந்தியா 41.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்து அபாரமாக வென்றது. கோஹ்லி 139 ரன் (88 பந்து, 10 பவுண்டரி, 9 சிக்சர்), ருதுராஜ் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நாளை மறுநாள் நடக்க உள்ளது.

இந்திய அணி நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்டினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 59 ரன் எடுத்தபோது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் தனது 55வது சதத்தையும் பதிவு செய்தார்.