பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் லதா, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு;
தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான முதல் பருவம் மற்றும் காலாண்டுத் தேர்வு கடந்த செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்த தேர்வுகள் இன்றுடன்(செப்டம்பர் 25) நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 5-ம் தேதி திறக்கப்படும்.
இதுதவிர விஜயதசமி நாளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது, மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. விடுமுறை நாட்கள் மழைக்காலமாக இருப்பதால் பாதுகாப்பு சார்ந்த அறிவுரைகளை தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாக பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.









