சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வழக்கமான நடைமுறையை மீறி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமான நிலையத்திற்கே நேரில் சென்று சீன அதிபரை வரவேற்றார்.
அமெரிக்கா சீனா இடையே ஓராண்டுக்கு மேல் வர்த்தக மோதல் தொடரும் நிலையில், இந்த பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதலே அமெரிக்கா சீனா வர்த்தக மோதல் நிலவி வந்தது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதிக்கவே சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு வரி விவகாரம் ஓரளவுக்கு செட்டில் ஆனது. இந்தச் சூழலில் தான் இப்போது சீன அதிபர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.வழக்கமாக எந்தவொரு உலக தலைவர் வந்தாலும் அமெரிக்க அதிபர் விமான நிலையத்திற்கு எல்லாம் சென்று வரவேற்க மாட்டார்கள். வாஷிங்டனுக்கு அருகே உள்ள Joint Base Andrews விமானப்படை தளத்துக்கே நேரில் சென்று வரவேற்றார். டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் வாஷிங்டனில் உள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூ விமான தளத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.ராணுவ இசைக்குழுவின் இசையுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரு தலைவர்களும் கைகுலுக்கி சிறிது நேரம் பேசினர். ஜி ஜின்பிங்கிற்கு இன்று வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் அரசு விருந்து நடைபெறுகிறது. அதில் முக்கிய தொழிலதிபர்களும் பங்கேற்பார்கள் என தெரிகிறது.அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகம், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தைவான் விவகாரம், ஈரான் மோதல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரு தலைவர்களும் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பயணத்தில் மிக பெரிய உடன்பாடுகள் ஏற்பட வாய்ப்பு குறைவு என்றாலும், வர்த்தக உறவுகளில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை இருக்கும் என தெரிகிறது.அமெரிக்கா சீனா மாறி மாறி வரி விதித்து வந்த நிலையில், அதை தற்காலிகமாக இரு நாடுகளும் நிறுத்தி வைத்திருந்தது. நவம்பர் 10ஆம் தேதியுடன் அந்த தற்காலிக நிறுத்தம் முடியவிருந்த நிலையில், 2027 ஜனவரி 10 வரை வரி விவகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். மேலும், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் ஒத்துழைப்பு, ராணுவங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு மற்றும் ஏஐ தொடர்பான பாதுகாப்பு ஆகியவையும் பேச்சுவார்த்தையில் இடம்பெறலாம் என தெரிகிறது.தைவான் விவகாரம் பேச்சுவார்த்தையில் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தைவான் தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், அமெரிக்கா அதை ஏற்க மறுக்கிறது. மேலும், தைவானுக்கான அமெரிக்க ஆயுத விற்பனையை குறைக்க வேண்டும் என்று ஜி ஜின்பிங் வலியுறுத்தலாம்.ஈரான் விவகாரமும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறும். சீனா ஈரானுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சீனா உதவ வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஆனால், சீனா உதவுமே என்பதே பெரிய கேள்வி!








