5 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும்

வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகளை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் போராட்டக் களத்தில் இறங்க உள்ளனர்.இதன் ஒரு பகுதியாக, வருகிற 26-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

இதையடுத்து திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தை நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வேலைநிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், மத்திய அரசு அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் சார்பில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால், வாரத்துக்கு 5 நாட்கள் வங்கிப்பணி என்ற கோரிக்கைக்கு அரசு சாதகமான முடிவை அறிவித்தால் மட்டுமே வேலைநிறுத்தத்தை கைவிடுவது குறித்து பரிசீலிக்க முடியும் என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.வருகிற 26-ந்தேதி முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ள நிலையில், அதைத்தொடர்ந்து வார இறுதி விடுமுறையும் வருவதால் வங்கிகளின் நேரடி சேவைகள் தொடர்ந்து 5 நாட்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம்.

இதனால் வங்கிகளில் நேரடியாக மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனை, காசோலை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.மேலும், வருகிற 30-ந்தேதி அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால், அதற்கு முன்பாக நடைபெறும் வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகளின் பணப்பரிவர்த்தனை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

குறிப்பாக நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் வழக்கமான நிதி நடவடிக்கைகளிலும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வாரத்துக்கு 5 நாட்கள் வங்கிப்பணி வழங்க வேண்டும் என்பதுடன், ஓய்வூதியத்தை புதுப்பித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வங்கி தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.

இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.வேலைநிறுத்தம் நடைபெறும் நாட்களில் வங்கி கிளைகளின் வழக்கமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களின் அத்தியாவசிய பணப்பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தேவையான நேரங்களில் இணையவழி வங்கிச்சேவை மற்றும் பணம் எடுக்கும் தானியங்கி எந்திரம் உள்ளிட்ட மின்னணு சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு வங்கிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.