செவ்வாய் கிரகத்தில் மனித குலத்தின் விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு வியக்கத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
நாசா நிறுவனத்தின் புகழ்பெற்ற பெர்சிவெரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் தனது ஐந்தாவது ஆண்டை வெற்றிகரமாகக் கொண்டாடி வரும் வேளையில், விஞ்ஞானிகளை மிரள வைக்கும் ஒரு புதிய ரகசியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் ஜெசெரோ பெருங்குழியில் அமைந்துள்ள “மார்ஜின் யூனிட் எனப்படும் பண்டைய ஏரிக்கரையின் ஓரத்தில் ரோவர் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, அங்குள்ள பாறைகள் குறைந்தது மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நீரால் கடுமையாக மாற்றமடைந்துள்ளன என்பதற்கான அசைக்க முடியாத தடயங்களை அது கண்டறிந்துள்ளது.
ஆரம்பத்தில், அந்த ஏரியில் படிந்த துகள்களால் உருவான படிவு பாறைகள் அங்கு இருக்கும் என்றே விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். ஆனால், உண்மை அதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு காலப்போக்கில் அரிப்புக்குள்ளானதால், பூமிக்கு அடியில் ஆழத்தில் இருந்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவான நடுத்தர பாறைகள் (Igneous rocks) வெளிப்பட்டதை ரோவர் கண்டறிந்தது. இந்த பாறைகளின் படிகங்கள்தான் நீருடன் நிகழ்ந்த பல வரலாற்று மோதல்களை தங்களுக்குள் பாதுகாத்து வைத்துள்ளன.
ரோவரில் பொருத்தப்பட்டுள்ள சூப்பர்கேம் என்ற அதிநவீன கருவி மூலம், 185-க்கும் மேற்பட்ட பாறைப் பகுதிகள் லேசர் ஒளிக்கதிர் கொண்டு துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டன. இதன் மூலம் தெரியவந்த மூன்று முக்கிய நிகழ்வுகள் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன:
கார்பன்-டை-ஆசைடு நிறைந்த நிலத்தடி நீர், அப்பகுதியில் இருந்த ஆலிவின் பாறைகளுடன் தீவிரமாக வினைபுரிந்து கார்பனேட் கனிமங்களை உருவாக்கியுள்ளது.
ஜெசெரோ பெருங்குழியில் பண்டைய ஏரி இருந்த காலக்கட்டத்தில், நீரின் மட்டத்திற்குக் கீழே இருந்த சில பாறைகள் சிலிக்கா படிவுகளால் உருமாற்றம் பெற்றுள்ளன.
மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, எரிமலைப் பாறைகள் வழியாக மிகவும் சூடான நிலத்தடி நீர் பாய்ந்துள்ளது. இதன் விளைவாக கால்சியம் சல்பேட் மற்றும் புளோரைட் கனிம நரம்புகள் பாறைகளில் உருவாகியுள்ளன.
இந்த நீர்-பாறை வினைகள் மூலம் ஹைட்ரஜன் வாயு உற்பத்தியாகி இருக்கக்கூடும். இது செவ்வாய் கிரகத்தின் நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான ஆற்றல் மூலமாக விளங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும், கார்பனேட் மற்றும் சிலிக்கா ஆகியவை கடந்த கால சூழல்களின் இரசாயன தடயங்களை அழியாமல் பாதுகாக்கக்கூடியவை.
இந்த புதிய கண்டுபிடிப்புகள் செவ்வாய் கிரகத்தின் பண்டைய காலநிலை, நீர் சுழற்சி மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை மனிதன் நினைத்ததை விட மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கலாம் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளன.







