பதவி ஆசைக்காகவும், கட்சி மாறுவதற்காகவும் மக்கள் மீது திணிக்கப்படும் தேவையற்ற இடைத்தேர்தல்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் நிகழ்த்திய அனல் பறக்கும் விரிவான உரை பின்வருமாறு. சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்ற குறுகிய நாட்களுக்குள்ளேயே அந்தப் பதவியை உதறித் தள்ளுவதும், வேறு கட்சியில் ஐக்கியமாகிவிட்டு மீண்டும் அதே தொகுதிக்கு மறுதேர்தலைச் சந்திப்பதும் எந்த வகையில் நியாயம் என சீமான் கேள்வி எழுப்பினார். தங்களுக்கு வாக்களித்த லட்சக்கணக்கான வாக்காளர்களை எளினமாக மதித்து, சுயநலத்திற்காக நடத்தும் இந்தத் தேர்தல்கள் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றார்.குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான மக்கள் பணம் ஒரு இடைத்தேர்தலுக்காகத் தண்ட செலவாக அழிக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும்கூட இந்தச் சீரழிவைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆளுங்கட்சியோடு இருந்தால்தான் மக்களுக்குச் சேவை செய்ய முடியும் என்ற நச்சு எண்ணத்தை விதைப்பது, எதிர்க்கருத்துகளுக்கு இடமளிக்காத கொடுங்கோன்மை மற்றும் சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு என்றார். ஆள் மாறுவதும், கட்சி மாறுவதும், வேட்டி சட்டையிலிருந்து கோட் சூட்டிற்கு மாறுவதும் மட்டுமே மாற்றம் ஆகிவிடாது என்று குறிப்பிட்ட சீமான், ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் (System) முழுமையாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினார். “பதவிப் பசிக்காகத் தன்னிச்சையாகத் தேர்தலைத் திணிப்பவர்களாக இருந்தால், அந்தத் தேர்தலுக்கான முழுச் செலவுத் தொகையையும் அந்த வேட்பாளர்களின் சொந்தப் பணத்திலிருந்தே வசூலிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் பணத்தை வீணடிக்கும் இந்த மோசமான புத்தி இவர்களுக்கு வரும்!” என்றார் சீமான்.
திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிமுறையைக் கடுமையாகச் சாடிய அவர், தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினையும், மின் பற்றாக்குறையும் தலைவிரித்தாடுவதாகக் குற்றம் சாட்டினார். அரிசி, பருப்பு, பால், சமையல் எரிபொருள் என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசின் சாதனைகளைத் தமிழகப் பத்திரிகைகளில் முழுப் பக்க விளம்பரமாகக் கொடுப்பதோடு நிறுத்தாமல், அண்டை மாநிலங்களிலும் அள்ளி இறைப்பதன் மர்மம் என்னவென்று கேள்வி எழுப்பினார். பெருமளவிலான கடன் சுமையில் மாநிலத்தை மூழ்கடித்துவிட்டு, ஏமாற்றும் தந்திரத்தை அறிவுள்ள சமூகம் சிந்திக்க வேண்டும் என்றார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட சீமான், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் ஊழல் மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் சவுக்கடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “உழைக்கும் மக்களின் உண்மையான சின்னமான விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து, இந்தத் தாராபுரம் மண்ணில் ஒரு புதிய வரலாற்றை எழுதத் தம்பி, தங்கைகள் முன்வாருங்கள்; புரட்சி எப்போதும் வெல்லும்!” என முழக்கமிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.








