ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் – ரகசியம் காக்கும் போலீசார்

ராமநாதபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் ஒரு வாரமாக ரகசியம் காத்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய உளவுத்துறை விசாரிக்க சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாக தங்கம், போதைப்பொருட்கள் கடத்தலில், சர்வதேச கும்பல் முதல் உள்ளூர் கும்பல் வரை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போதைப்பொருள் தடுப்பு தனிப்படை போலீசார், ராமநாதபுரம் சக்கரக்கோட்டையை சேர்ந்த குப்பு (45), பரமக்குடி லீலாவதி நகர் செல்வராஜ் (62), தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் ஆற்றாங்கரை பகுதியை சேர்ந்த சரவணன் (50), பூபதி (25), வேலாயுதம் (40) ஆகியோரை பிடித்து கேணிக்கரை போலீசில் வைத்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் 3.45 கிலோ எடை கொண்ட 38 தங்கக்கட்டிகள், 28 பவுன் தங்கநகை, ரூ.12.20 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என தெரிகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸ் தரப்பில் வெளியே தகவல் கூறவில்லை. தகவல் வெளியே கசிந்த நிலையில், ரோந்து சென்றபோது, சந்தேகத்தின்பேரில் நடத்திய சோதனையில் கண்டுபிடித்தது போன்றும், பிடிபட்டவர்கள் முன்னுக்கு பின் தகவல், முக்கிய குற்றவாளிகளை பிடிக்க ரகசிய விசாரணை போன்ற கதைகளை கூறி வழக்கை மூடி மறைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிடிபட்ட 5 பேரிடம் ஒரு வாரமாக விசாரணை மட்டுமே செய்து வருகின்றனர்.

தற்போது செப். 17ம் தேதி பிடித்ததாக கணக்கு காட்டப்பட்டு விசாரணை என வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் என யாரையும் கைது செய்யவில்லை. தொடர்ந்து ரகசியம் காத்து வருகின்றனர். கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்தில் கடத்தல் கும்பல், குற்றவாளிகளுக்குள் ஏற்படும் தொழில் போட்டி, விரோதம், காழ்ப்புணர்ச்சியால் போலீசாருக்கு கிடைக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு, அவ்வப்போது பிடித்தாலும் கூட முறையாக பறிமுதல் செய்த தங்கத்தை கணக்கு காட்டுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேபோன்று இந்த வழக்கிலும் ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் பிடித்தும் கூட ஒருவரையும் கைது காட்டவில்லை. அது, இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கமா அல்லது வேறு வகையிலான கடத்தல் தங்கமா?, பறிமுதலானது ரூ.5 கோடி மதிப்பு தங்கம் தானா அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள தங்கமா என பல்ேவறு கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணையை மத்திய உளவு போலீசார், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் விசாரிக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.