காவல் நிலைய சிசிடிவி பதிவுகளை 18 மாதங்கள் பாதுகாக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரையை சேர்ந்த தினகரன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 28ம் தேதி எனது மனைவியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.அவரை 36 மணி நேரம் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்து பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எனவே, மதுரை எஸ்பி அலுவலகத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு ஐகோர்ட் கிளை நீதிபதி முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ”சிசிடிவி காட்சிகளை 15 நாட்கள் மட்டுமே சேமித்து வைக்க முடியும்” என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ”உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் 18 மாதங்கள் பாதுகாக்க வேண்டும். ஆனால், 15 நாட்கள் மட்டுமே பாதுகாக்க முடியும் என கூறுவதை ஏற்க முடியாது. மதுரை எஸ்பி அலுவலத்தில் சிசிடிவி கேமராக்களை நிறுவியது யார்? இயங்காத கேமராக்கள் எத்தனை? எஸ்பி அலுவலகத்தில் தனியார் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் எந்த உத்தரவின்படி நிறுவப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.









