பொதுவாக தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கக்கூடும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான்-நிக்கோபார் தீவுப் பகுதிகளில் இந்த வார இறுதியில் தொடங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 14ஆம் தேதியான நாளை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 15ஆம் தேதியும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
மே 18ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்ச வெப்பநிலை கணிசமாக குறைந்து பதிவாகி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 35.2 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








