பிரசித்திபெற்ற திருப்பதி லட்டில் ரசாயனம் கலந்த நெய்

திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிப்பதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பாமாயில் மற்றும் ரசாயனங்கள் கலந்த கலப்பட நெய்யை விநியோகித்த வழக்கில், ‘சுக்ருதி ஃபுட்ஸ்’ ( நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்களாவை அமலாக்கத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட அவர், விசாகப்பட்டினம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பாம் கெர்னல் ஆயில் மற்றும் பல்வேறு ரசாயனங்களை கலந்து தயாரிக்கப்பட்ட கலப்பட நெய்யை, ‘அக்மார்க் சிறப்புத் தர பசு நெய்’ என்ற பெயரில் இவர்கள் தேவஸ்தானத்திற்கு விநியோகித்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த 2019 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் ரூ.230 கோடி மதிப்பிலான நெய் மோசடியாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதில் கைலாஷ் சந்த் மட்டும் ரூ.96 கோடி மதிப்பிலான கலப்பட நெய்யைத் தயாரித்து, ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ், ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி உள்ளிட்ட பினாமி நிறுவனங்கள் வாயிலாக சப்ளை செய்துள்ளார். உண்மையை மறைக்கப் போலி ஆவணங்களையும் அவர் தயாரித்துள்ளார். இதே வழக்கில் ‘போலே பாபா ஆர்கானிக் டெய்ரி மில்க்’ நிறுவனத்தின் இயக்குநர் விபின் ஜெயினை அமலாக்கத்துறை முன்னதாகக் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.