வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் செப்டம்பர் 19-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, செப்டம்பர் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறுமா என்பதை அதன் நகர்வு மற்றும் வளிமண்டல சூழல்களைப் பொறுத்தே கணிக்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையிலும், செப்டம்பர் மாதத்தில் கோடைக் காலத்தைப் போல வெயில் சுட்டெரித்த நிலையிலும், இந்த அறிவிப்பு மக்களுக்கு சற்று ஆறுதலையும் அதேவேளையில் எச்சரிக்கையையும் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இந்திய நிலப்பரப்பில் இருந்து விலகி வரும் நிலையில், இந்த புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக வட மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடல் பகுதியில் மணிக்காற்று 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், சில சமயங்களில் 60 கி.மீ வேகம் வரையிலும் பலத்த சூறாவளிக் காற்றாக வீசக்கூடும் என்பதால் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். இதனால் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை அந்தமான் கடல், மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.






