திருப்பதியில் 2ம் நாள் பிரமோற்சவத்தில் மலையப்ப சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும், சிறிய சேஷ வாகனத்தை நாகத்தின் ராஜாவான வாசுகியாகவும் நினைத்து சுவாமி பத்ரி நாராயணன் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா வந்ததை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனம் உருகி கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
சுவாமி வீதிஉலாவில் கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் ஜீடர்களின் சீடர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம் ஆடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். பிரமோற்சவத்தின் இரண்டாவது நாளான ேநற்றிரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அன்ன பறவை பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக நம்பிக்கை. பிரமோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்திலும் இரவு முத்து பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளார். மலையப்ப சுவாமி சின்னசேஷ வாகனத்தில் திருமலை வீதிகளில் வலம் வந்தபோது ஆந்திர மாநிலம், தெலங்கானா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களைச் சேர்ந்த 20 கலைக் குழுக்களின் 539 கலைஞர்கள் நடனமாடி பங்கேற்றனர். இதில் சென்னையை சேர்ந்த நடனக்கலைஞர்கள் காவடி ஆட்டம் ஆடி வந்தனர்.








