டெங்கு காய்ச்சல் பாதிப்பு – அரசு விளக்கம்

மிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப்போக்கும் வகையிலும், உண்மையான நிலவரத்தைத் தெளிவுபடுத்தும் வகையிலும் விரிவான விளக்கத்தை தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் விளக்கத்தில் கூறிய விவரங்கள் பின்வருமாறு; நடப்பு 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் (Dengue in Tamil Nadu) பரவல் என்பது வழக்கத்திற்கு மாறானதோ அல்லது அபாயகரமான அளவிலோ இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் தட்பவெப்பநிலை மாற்றங்களின் காரணமாக டெங்கு பாதிப்புகளில் பருவகால மாறுபாடு (Seasonal Variation) ஏற்படுவது இயல்பானதாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான அதிகாரப்பூர்வ தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தற்போதைய நிலவரத்தைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 34,339 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 13 உயிரிழப்புகள் பதிவாகின. 2025 ஆம் ஆண்டில் 15,688 பேர் பாதிக்கப்பட்டு, 13 உயிரிழப்புகள் பதிவாகின. நடப்பு 2026 ஆம் ஆண்டில் செப்டம்பர் 16 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 16,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் Aedes வகை கொசுக்களின் பெருக்கம் பருவமழைக் காலங்களில் அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கொசு உற்பத்தி அதிகரிக்கக்கூடிய சூழல் ஏற்படுவதால், டெங்கு பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்காக பொறுப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சுகாதாரம் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளிடையேயான ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு, ஒருங்கிணைந்த முறையில் தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணித்து, தேவையான மருத்துவச் சிகிச்சையை விரைவாக வழங்கும் வகையில் காய்ச்சல் வார்டுகள் (Fever Wards) ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சலுடன் வரும் நோயாளிகளின் உடல்நிலையை மதிப்பீடு செய்து, நோயின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப உரிய முன்னுரிமையில் சிகிச்சை வழங்க ஏதுவாக பயிற்சி அளிக்கும் (Triaging) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும், டெங்கு பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கொசுக்கட்டுப்பாடு, கொசுப்புழுக் கட்டுப்பாடு (Larval Control), கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றுதல் (Source Reduction) உள்ளிட்ட நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.

டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் அரசுடன் இணைந்து செயல்படுவதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், பழையடயர்கள், பூந்தொட்டிகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் உரியமுறையில் பராமரிக்க வேண்டும். வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து உடனடியாக அகற்றுவதுடன், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவ ஆலோசனை மற்றும் உரிய சிகிச்சையைப் பெறவேண்டும். டெங்கு தடுப்பில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பும் இணைந்தால், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவது மேலும் சிறப்பாக அமையும்.