ஹோட்டலில் அடைத்து மிரட்டியது யார்? சொல்ல வேண்டி இருக்கும் – அமைச்சர் ஷாஜகான்

ட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மே 8-ஆம் தேதி இரவு 10 மணிக்குப் பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தது யார்?

மிரட்டியது யார்? எங்களுக்குக் காவல் போட்டது யார்? என்பதையெல்லாம் உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிடும் என அமைச்சர் ஷாஜகான் பகீர் குற்றச்சாட்டுகளை பேரவையில் முன் வைத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் பேசிய சிறுபான்மை நலத்துறை துறை அமைச்சர் ஷாஜகான் “சையது பாரூக் பாஷா எம்எல்ஏ சொன்னது அதிமுகவைப் பற்றிப் பேசவில்லை; நான் அது குறித்து விளக்கமாகச் சொல்கிறேன். 2026-ஆம் ஆண்டு புதிய ஆட்சி மலர்ந்த பிறகு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அதிர்வலைகளை நாம் அனைவரும் பொதுமக்களும் கண்டு வருகின்றனர். இந்த ஆட்சியின் தலையாய நோக்கமாக, முதல்வர் லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு ஆட்சி என்பதைத் தொடர்ச்சியாகப் பிரகடனப்படுத்தி வருகிறார். நேற்று முன்தினம் நமது சட்டமன்ற உறுப்பினர் ஃபாரூக் பாஷா திருவண்ணாமலை கூட்டத்தில் பேசியதைத் திரித்து அவர்கள் பேசி வருகின்றனர். முதலில் இந்த ஆட்சி அமைந்த பிறகு, ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு, லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி என்பதுதான். இந்த ஆட்சி சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை மீறி பணம் வாங்குகிறார்கள் என்று பேசுவதெல்லாம், தலைமுறை தலைமுறையாக யாரும் அரசியல் செய்ய முடியாத ஒரு சூழலை ஏற்படுத்திவிடும். இது தொடர்ச்சியாக ‘சோபா மாடல்’ என்று முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பேசுவது குறித்துத் திரித்துப் பேசுவதால், சில விளக்கங்களைக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது.

மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவு வந்த பிறகு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக நின்று முடிவெடுப்பதாக அறிவித்திருந்தாலும், மே 9-ஆம் தேதி ஒன்றிய அரசின் கைப்பாவையான ஒரு ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த ஆதரவை அளித்தோம். இருப்பினும் அவர் சொல்ல வந்த குற்றச்சாட்டு, ‘மே 7-ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் -கைத் தொடர்பு கொண்டவர்கள் யாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்கள்’ என்பதைப் குறிப்பிட்டுச் சொல்கிறார். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, ஜோசப் விஜய்யின் ஆட்சி நடந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் மே 7-ஆம் தேதி ஒரு நடவடிக்கை எடுத்தார்கள்; ( அப்போது நீங்கள் எடுத்தீர்கள் என்று நான் சொல்லவில்லை” என்று அதிமுகவினரைப் பார்த்துத் தெரிவித்தார்.)

திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அப்படி ஒரு முடிவை எடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிடம் சொன்னது. 8-ஆம் தேதி ஒரு முடிவெடுத்து இன்னொரு யோசனையைச் சொன்னது. முஸ்லிம் லீக் அதை ஏற்க மறுத்த காரணத்தினால், காயிதே மில்லத் கண்ணிய அரசியலைக் காக்கும் காரணத்தால் சில விஷயங்களை ஓப்பனாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. 8-ஆம் தேதி இரவு 10 மணிக்குப் பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தது யார்? மிரட்டியது யார்? எங்களுக்குக் காவல் போட்டது யார்? என்பதையெல்லாம் உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிடும்.இதுபோன்று பல நிகழ்வுகள் நடந்தன. எங்களைப் பொறுத்தவரை, ஒன்றிய அரசின் ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான் முதலமச்சருக்கு ஆதரவளித்து ஆட்சி அமைக்கக் காரணமாக இருந்தோம். அதன் பிறகு நடக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் மக்களுக்கான ஆட்சியாக, சிறுபான்மை சமுதாயத்திற்கான ஆட்சியாக, நமது மாநில சுயாட்சியைக் காக்கும் ஆட்சியாக, சமத்துவத்தைக் காக்கும், சமூக நீதியைக் காக்கும் ஒரு ஆட்சியாக இருக்கக்கூடிய காரணத்தால், இன்னும் மனம் உவந்து பல மடங்கு அன்போடு இந்த ஆட்சிக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் மானியக் கோரிக்கைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் செயல்படத் தொடங்கும். ஆனால், அந்தப் பதற்றம் எதிர்க்கட்சிகளை, குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தை நிலைகுலைய வைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், சிறுபான்மை நலத்துறை மானியக் கோரிக்கையில் 11 புதிய அறிவிப்புகளையும், மற்ற துறைகளின் சார்பாக சிறுபான்மை மக்கள் நலம்பெறும் வகையில் 20 புதிய அறிவிப்புகளும் வந்துள்ளன. இதைத்தான் அவர்களால் தாங்க முடியவில்லை. ஏன் தாங்க முடியவில்லை என்றால், அவர்கள் வாங்கியிருக்கும் 31% வாக்கு, சிறுபான்மை கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகள். அதற்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற பதற்றத்தில், அந்த 20 திட்டங்களும் இந்த மக்களுக்குச் சென்று சேரக்கூடாது என்ற அடிப்படையில், சிறுபான்மை சமூகத்தின் தாய் சபையாக இருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீது தொடர்ச்சியாகச் சேற்றை வாரி இறைப்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல, வருந்தத்தக்கது.

நான் சவால் விட்டே சொல்கின்றேன்; இதுவரை இத்தனை ஆண்டுகளில், ஏதாவது ஒரு மானியக் கோரிக்கையில் சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள், இஸ்லாமிய மக்கள் நலம் பெறக்கூடிய 20 அறிவிப்புகள் இதுவரை வந்திருக்கிறதா? என்பதைத்தான் நாங்கள் கேள்வியாக கேட்கிறோம். இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் ‘கோடி’ பேரம் பேசினார்கள் என்கிறார்கள். அப்படி என்றால், நாங்கள் ஏழாம் தேதி பேசியது, எட்டாம் தேதி பேசியது, எந்த ஹோட்டலில் அடைத்து வைத்தார்கள், எங்களையெல்லாம் யாரெல்லாம் காவல் காத்தார்கள் என்பதையெல்லாம் உடைத்துப் பேச வேண்டி வந்தால், அது தமிழக அரசியலுக்கு நல்லது அல்ல.

ஒரு சிறப்பான அரசு அமைந்துள்ளது; சிறப்பான திட்டங்கள், லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி அமைந்துள்ளது. இதற்குத் துணை நிற்பதோடு அந்த திட்டங்களை வரவேற்க வேண்டும். குறைகள் இருந்தால் எப்போதும் திறந்த மனதோடு கேட்பதற்கு முதல்வர் தயாராக உள்ளார். கண்ணியமான முறையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அதைத் திருத்திக்கொள்வார்கள். அதைவிட்டுவிட்டுச் சேற்றை வாரி இறைப்பது, பழி சொல்வது, அவதூறுகள் பரப்புவது தொடர்ந்தால், எல்லாவற்றையும் திறந்து பேசினால் யாரும் அரசியல் செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்படலாம்.” என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.