மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் குறித்த நாளான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாக உயர்ந்த காரணத்தால் பருவ மழையை எதிர்நோக்கி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
துவக்கத்தில் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதாலும் கடைமடை வரை தண்ணீர் சென்று சேராத காரணத்தாலும் நீர் திறப்பை அதிகரிக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை அடுத்து நேற்று மாலை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர் திறப்பு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 9,709 கனஅடி வீதம் நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 9,512 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதிலும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.39 அடியிலிருந்து 92.37 அடியாக குறைந்துள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால் அணை மின் நிலையம் சுரங்க மின் நிலையம் மற்றும் ஏழு கதவணைகளில் மின் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளதாக நீர் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.