டெல்லியில் மாணவர் விடுதி இடிந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் இருந்து இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 5 பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மற்றொருவரும் பின்னர் சிகிச்சைப் பலனின்றி பலியானார். இதையடுத்து இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இரண்டாவது நாளாக திங்கட்கிழமையும் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கட்டட உரிமையாளர் மற்றும் பலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் ஆண்கள் தங்கும் விடுதி (பி.ஜி.) செயல்பட்டு வந்த 5 மாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இடிந்து விழுந்தது. 5 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தில்லி காவல் துறை, தீயணைப்புத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), மாவட்ட பேரிடா் மேலாண்மை குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்பகுதி மக்களும் மீட்புப் படையினருடன் இணைந்து இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்ததாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து, முதல்வா் ரேகா குப்தா, காவல் துறை ஆணையா் அனுராக் குமாா், புது தில்லி எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.
டெல்லி மாணவர் விடுதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு






