ஹெச் 1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்களின் மனைவி அல்லது கணவர்கள் அங்கேயே பணி செய்ய உரிமையை பறிக்கும் வகையில், விதிமுறைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இந்தியர்களே இந்த விசாவை அதிகம் வைத்து இருக்கும் நிலையில் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து குடியேற்ற விதிகள், வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கடுமையாக்கி வருகிறார். அமெரிக்காவின் நலன்களுக்கே முன்னுரிமை அளிப்பேன் என்று கூறி டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் தங்கி பணிபுரிபவர்களுக்காக வழங்கப்படும் ஹெச் 1 பி விசா திட்டத்தில் பல அதிரடி மாற்றங்களை டிரம்ப் நிர்வாகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஹெச்1பி விசா கட்டணம் ரூ.1.9 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக அமெரிக்கா உயர்த்தியது. இந்த கட்டண உயர்வு காரணமாக, அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு மென்பொறியாளர்கள் பணியில் சேருவதை தடுக்க மறைமுகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்கள் ஹெச்1பி விசா கட்டண உயர்வுக்கு தடையை விதித்தன. இதனை எதிர்த்து அமெரிக்க அரசு தரப்பில் தொடரப்பட்ட மேல் முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஹெச்1பி விசாவுக்கு ரூ.1.9 லட்சம் முதல் ரூ.4.7 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஹெச் 1 பி விசா கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு அமைச்சகம், டொனால்டு ட்ரம்பிடம் புதிய பரிந்துரையை சமர்ப்பித்து இருக்கிறது.அதில், ஹெச்1 பி விசா கட்டணத்தை ரூ.98 லட்சமாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஹெச்.1 பி விசா விவகாரத்தில் மேலும் சில விதிகளை கடுமையாக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, ஹெச் 1 பி விசா வைத்து இருக்கும் நபர்களின் வாழ்க்கை துணை (கணவன் அல்லது மனைவி) அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக பணியாற்றுவதை அனுமதிக்கும் ஹெச்4 விசா உரிமையை பறிக்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த பல தசாபதங்களால அமலில் இருக்கக் கூடிய இந்த ஹெச் 4 விசா கொள்கையை மாற்ற டிரம்ப் நிர்வாகம் மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த விதி அமலுக்கு வந்தால் அமெரிக்காவில் பணி செய்யும் இந்தியர்களே கடுமையாக பாதிக்கப்படவ் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அமெரிக்கவில் ஹெச் 4 பெர்மிட் வைத்து இருக்கும் பெரும்பாலானோர் இந்தியர்களே ஆவர். அதாவது கடந்த 2014 முதல் 2017 வரையிலான ஹெச் 4 விண்ணப்பங்களுக்கான தரவுகளை வைத்து பார்க்கும் போது 93 சதவீதம் பேர் இந்தியர்களே விண்ணப்பித்து இருந்ததும், அதில் 94 சதவீதம் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த திட்டமானது தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் அலுவலகத்தின் கீழ் வரும் Reginfo.gov என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும் இந்து எப்போது வெளியிடப்படும் என்பது பற்றிய எந்த ஒரு காலக்கெடு விவரமும் அதில் இடம் பெறவில்லை. இது ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும் இறுதி உத்தரவு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால், தற்போதைக்கு ஹெச்4 விசா ஹோல்டர்களின் பணி உரிமைக்கு உடனடியாக சிக்கல் ஏற்படாது. புதிய முன்மொழிவை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றால், இந்த விதி மாற்றத்திற்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஏதுவாக அமெரிக்கா உள் பாதுகாப்புத் துறை இதை முறைப்படி வெளியிட வேண்டும். கருத்தை பெற்ற பிறகே இறுதி உத்தரவு வெளியிட முடியும். அதுவரை தற்போது உள்ள விதிகளின் படி ஹெச் 4 விசா வைத்து இருப்பவர்கள் வழக்கம் போல பணியாற்ற முடியும். அதில் எந்த சிக்கலும் வராது.








