அரிசி, காய்கறிகள், பலசரக்கு பொருட்களைத் தொடர்ந்து சாமானிய மக்கள் அனைவரும் பயன்படுத்தும் சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.7 அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் சர்க்கரைக்கு அதிக தேவை இருக்கும். விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதால் இனிப்பு பலகாரங்கள் தேவையும் விற்பனையும் அதிகரிக்கும்.
நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைவாகவே உள்ளது. பண்டிகை கால தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாதது சந்தையில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் புதிய சீசனின் போது, ஆலைகளிடம் சர்க்கரை இருப்பு சுமார் 3.5 மில்லியன் டன்களாக மட்டுமே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிக குறைந்த அளவாகும். இதற்கிடையே சர்க்கரை விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு ஏற்கனவே தடை விதித்துள்ளது. மேலும் பதுக்கலை தடுக்க, டீலர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சர்க்கரையை இருப்பு வைக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை அரசு ஜூலை மாதமே விதித்தது. இந்த விதிமுறைகள் நவம்பர் 30, 2026 வரை அமலில் இருக்கும். அதாவது டீலர்கள் 4,000 குவிண்டால்களுக்கு மேல் சர்க்கரை இருப்பு வைக்கக்கூடாது என்றும், இருப்பை 30 நாட்களுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் வரை சராசரியாக கிலோ ரூ.47 வரை விற்பனையான சர்க்கரை, தற்போது நெல்லையில் ரூ.54 ஆக விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ.7 அதிகரித்துள்ளது, இது சுமார் 15 சதவீத உயர்வாகும். நாடு தழுவிய அளவிலும் இதே போக்கே நிலவுகிறது. கடந்த 7ம் தேதி நிலவரப்படி, நாட்டின் மொத்த சர்க்கரை விலை சராசரியாக கிலோ ஒன்றுக்கு ரூ.45.25 ஆக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ”ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அரிசி விலை, பலசரக்கு பொருட்கள், காய்கறிகள் விலை உயர்ந்து விட்டது. தற்போது சர்க்கரை விலை உயர்வால் பண்டிகை காலங்களில் கொள்முதல் செய்வது சவாலாக மாறியுள்ளது. மேலும் இந்தக் காலக்கட்டத்தில் சர்க்கரை நுகர்வு அதிகமாக இருக்கும்.” என்றனர். இந்த விலை உயர்வு சாதாரண நுகர்வோரை மட்டுமின்றி, இனிப்பு மற்றும் பேக்கரி தொழில் செய்பவர்களையும் பாதித்துள்ளது. சர்க்கரை விலை உயர்வால் இனிப்புகள், பிஸ்கட்கள் உள்ளிட்டவற்றின் விலையும் உயர வாய்ப்புள்ளது.








