கைதிலிருந்து எஸ்கேப்பான செந்தில்பாலாஜி..

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1000 கோடி முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.இந்த நிலையில், ஊழல் தடுப்பு போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்த நிலையில், இதில், டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலான் இயக்குனரான ஐஏஎஸ் அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தன்னை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், அவரை கைது செய்யவும் நீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர். அத்துடன், செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், வழக்கில் சாட்சிகளை கலைக்க கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை வழங்கியதுடன், இதனை மீறினால் முன் ஜாமீனை ரத்து செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.   முன்னதாக, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தார். இதில், தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழைய வழக்கை மீண்டும் விசாரிக்கின்றனர். இந்த வழக்குக்கு செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு அளிப்பார். எனவே, அவருக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும். அத்துடன், அவரை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதற்கு, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.100 கோடி ஊழல் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்ற போது கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி இருந்தனர். எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான தேவை உள்ளது என்று வாதத்தை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பதை உறுதி செய்கிறோம். இதற்கு மேல் இந்த வழக்கு விசாரணையில் வேறு என்ன வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.