ரூ.5 கோடி பேரம் – ராஜ்மோகன் பகீர் தகவல்!

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்காகத் தனக்கு ரூ. 5 கோடி லஞ்சம் தர ஒரு நபர் முன்வந்ததாக தமிழக அரசின் பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியுள்ளார்.

அமைச்சரின் இந்த வெளிப்படையான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 1988-ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி லஞ்சம் கொடுப்பதும், கொடுக்க முயல்வதும் சட்டப்படி குற்றமாகும் என்பதால், லஞ்சம் கொடுக்க முயன்ற நபரின் அடையாளத்தை அமைச்சர் ஏன் இன்னும் மறைக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. லஞ்சம் கொடுக்க முன்வந்த அந்த நபர் யார், அவருக்கும் பாடநூல் கழக தலைவர் லயோலா மணிக்கும் என்ன தொடர்பு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக மற்றும் திமுகவின் ஐடி விங் நிர்வாகிகள் தீவிரமாகக் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் முறையான சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் லயோலா மணி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை  விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. லஞ்சப் பேர இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பின்னணியில், லயோலா மணி மீது விசாரணை நடத்தக் கோரி குரல்கள் வலுத்து வருவதால், அவரது பாடநூல் கழகத் தலைவர் பதவிக்குத் தற்போது நெருக்கடியும் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.