தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.38,99,030 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசின் கீழ் வருவாய், நகராட்சி, பத்திரப்பதிவு, நிர்வாக, வட்டார போக்குவரத்து என 36 துறைகள் உள்ளது. இதில் அரசுக்கு நேரடி வருவாய் தரும் துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் லஞ்சம் பணம் பெறுவதாக தொடர் புகார்கள் எழுந்தது. அதைதொடர்ந்து துறை வாரியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அரசு துறை அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தில் கணக்கில் வராத பல லட்சம் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகளவில் இருந்ததால் அரசு அதிகாரிகள் ஜிபே மூலம் பணம் பெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் ஜிபே, போன் பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிகளவில் பணம் நடமாட்டம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது. அதைதொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள அதிக வருவாய் தரும் 14 சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் மாவட்ட வாரியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.18,96,415 மற்றும் ஜிபே மூலம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.20,02,615 என ரூ.38,99,030 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.







