தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு வரலாறு காணாத சாதனை

கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல் துறையினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையரை வரவேற்றனர். பின்பு மாநகர காவல் துறை சார்பில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவு குறித்துத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். “இத்தேர்தலில் 4.93 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இது சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பதிவான மிக அதிகபட்ச வாக்கு எண்ணிக்கையாகும். மேலும், இத்தேர்தலில் ஏறத்தாழ 86 சதவீதம் வாக்குப்பதிவு எட்டப்பட்டுள்ளது. இதுவும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழக வரலாற்றில் பதிவான மிக அதிக அளவிலான வாக்குப்பதிவு சதவீதமாகும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கோவை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகத் எனது மனைவி அனுராதாவுடன் வருகை தந்துள்ளேன். தென்னிந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை மிக முக்கியமானது. உலகத்தரம் வாய்ந்த கல்விச் சூழல், ஜவுளித் தொழில் மற்றும் பொறியியல் துறைத் திறமையால் கோவை நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. தமிழகத்தின் வளமான ஆன்மீக, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை மக்கள் பெருமையுடன் போற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் ஜனநாயகத் திருவிழாவில் பெருமளவில் பங்கேற்று வரலாற்றுச் சாதனை வாக்குப் பதிவைச் சாத்தியமாக்கியுள்ளனர்” என்றும் அவர் கூறினார்.