இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை நாளை தொடக்கம்

ந்தியாவின் முதல் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஹைட்ரஜன் ரயில் நாளை ஜூலை 17ம் தேதிபிரதமர் நரேந்திர மோடியால் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபத் இடையே தொடங்கி வைக்கப்படவுள்ளது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மாற்று எரிசக்தியில் இயங்கும் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?

உலகின் மிக நீளமான மற்றும் சக்திவாய்ந்த வடிவமைப்பு. இந்த ரயில் மொத்தம் 10 பெட்டிகளைக் கொண்டது. இதில் 8 பயணியர் பெட்டிகளும், 2 எஞ்சின் இயக்கும் பவர் கார்களும் அடங்கும். 3,200 குதிரைத்திறன் மற்றும் 2,400 கிலோவாட் ஒருங்கிணைந்த மின் திறன் கொண்ட எஞ்சின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. உலகளவில் இயக்கப்படும் ஹைட்ரஜன் ரயில்களில் இதுவே மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும்.

இந்த ரயிலில் 682 சொகுசு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. புறநகர் மற்றும் குறுகிய தூரப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஒரே நேரத்தில் சுமார் 2,600 பயணிகள் வரை தாராளமாக இதில் பயணிக்க முடியும்.

வழக்கமான டீசல் ரயில்களைப் போலப் பயங்கர சத்தமோ அல்லது அதிர்வுகளோ இதில் இருக்காது. மின்சார ஆற்றலால் இயங்குவதால், சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். இதனால் பயணிகள் அமைதியான முறையில் பயணிக்கலாம். சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலின் உட்புறம் நவீன எல்.இ.டி விளக்குகள், காற்றோட்ட வசதிகள் மற்றும் பயணிகளுக்கான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.