சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், கணினி பராமரிப்பு நிறுவனத்தின் டீம் லீடர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமையகத்தில் கணினி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த ஆர்ம் டெக் என்ற ஒப்பந்த நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அந்த நிறுவனத்தின் டீம் லீடரான கோபிநாத் என்பவர் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அரக்கோணத்தைச் சேர்ந்த கோபிநாத், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், திருடிய ஹார்டு டிஸ்க்குகளை பெங்களூருவில் விற்றுவிட்டதாக கோபிநாத் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகளை மீட்க கோபிநாத்தை பெங்களூருக்கு சிந்தாதிரிப்பேட்டை தனிப்படை போலீசார் நேரில் அழைத்துச் சென்றுள்ளனர்.திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகளில் கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற நிலக்கரி கொள்முதல், அதன் பரிமாற்றங்கள், சூரிய மின்சாரம் கொள்முதல், தனியார் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களின் விவரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஒப்பந்த முறையில் பணியாற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளப் பட்டியலும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே, திருவல்லிக்கேணி துணை ஆணையர் டி.ஜெயச்சந்திரனை சந்தித்து வழக்கின் தற்போதைய நிலையை அமைச்சர் நிர்மல் குமார் கேட்டறிந்தார். அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், மின்வாரியத் தரவுகளை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.







