இந்தியா வந்துள்ள வெனிசுலா தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வெனிசுலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டதால், அவரை அமெரிக்க படைகள் வெனிசுலாவுக்குள் புகுந்து கைது செய்தது. அமெரிக்க சிறையில் இருக்கும் மதுரோ போதைப் பொருள் கடத்தல் உட்பட பல வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்றார். அவர் நேற்று முன்தினம் இந்தியா வந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த வருகை இந்தியா-வெனிசுலா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
இந்தியா, வெனிசுலாவின் கச்சா எண்ணெயை முன்பு அதிகளவில் (தினமும் 4 லட்சம் பேரல்கள்) இறக்குமதி செய்து வந்தது. ஆனால், அமெரிக்கத் தடைகள் காரணமாக கடந்த 2020-ல் இந்த கொள்முதல் நிறுத்தப்பட்டது. மதுரோ கைதுக்குப்பின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தடைகள் நீக்கப்பட்டது. அதன் பின்னர், இந்தியா மீண்டும் வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியது.
ஈரான் போர் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தடைபட்டதால், வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரித்தது.
இந்நிலையில் வெனிசுலா தற்காலிக அதிபர் தனது அமைச்சர்கள் குழுவினருடன் இந்தியா வந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவருடன் வெளியுறவு, பொருளாதாரம் மற்றும் நிதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் தகவல், மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளின் அமைச்சர்கள் உட்பட பல அமைச்சர்கள் வந்துள்ளனர். அவர்கள் இந்தியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.







