அமைச்சர் என்றே தெரியாமல் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்!

மிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றியுள்ளது தவெக, அந்த வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் இளைஞர்களை கொண்ட அமைச்சரவை உருவாகியுள்ளது. அமைச்சரவைக்கு புதிது என்றாலும் பல இடங்களில் தினந்தோறும் ஆய்வு பணிகளை அமைச்சர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர்பாபு செயல்பட்டு வந்தார்.

தமிழகம் முழுவதும் அறிந்த முகமாக சேகர்பாபு இருந்தார். தினந்தோறும் கோயில் கும்பாபிஷேகம், கோயிலில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இதே போல முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பவர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ். அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் ஆய்வு செய்து பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வுக்காக வந்துள்ளார். அப்போது அமைச்சர் ரமேஷ் மட்டும் தனியாக திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்கு வந்து சுற்றிப்பார்த்துள்ளார். அப்போது கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கட்டணம் எவ்வளவு? என அங்கு இருந்த அர்ச்சகர்களிடம் அமைச்சர் ரமேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அர்ச்சகர்கள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அமைச்சருடன் வந்த 4 பேருக்கு சேர்த்து தலா 1000 ரூபாய் என கேட்டு 4 பேருக்கு 4000 ரூபாய் தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து அர்ச்சகர்களிடம் 4000 ரூபாயை Gpay மூலம் அனுப்பியுள்ளார். இவர்தான் அமைச்சர் என தெரியாமலேயே அர்ச்சகர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அன்னதான கூடத்தில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தபோது, அதிகாரிகளிடம் அர்ச்சகர்கள் தரிசனத்திற்கு ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பி டோஸ் விட்டதாக கூறப்படுகிறது.