சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு அணி என அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டிருந்தது.
இதனிடையே, தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா, மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயகுமார் ஆகியோர் நேற்று முன் தினம் தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே இந்த மூன்று எம்எல்ஏக்களும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். அதனை தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் தவெகவில் இணைந்தார். இதன் மூலம், அதிமுகவின் எம்.எல்.ஏக்களின் பலம் 47இல் இருந்து 43ஆக குறைந்தது. சி.வி.சண்முகம் தரப்பின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது, அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் எஸ்.பி.வேலுமணி தரப்பும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்திருந்தது. இந்த கட்சி தாவல் சட்டத்திற்கான நோட்டீஸ் கொடுத்து இரண்டு வார கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி – எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் இடையே சமாதானம் எட்டப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.







