நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளன்று ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சரும் சென்னை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான பி.கே. சேகர்பாபு மீது சென்னை கடற்கரை காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடிப் பகுதியில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குச்சாவடிக்குள் திமுகவினர் அத்துமீறி நுழைய முயன்றதாகக் கூறி, அங்கிருந்த தவெக வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தடுத்த நிறுத்த முயன்றனர். அப்போது அங்கு வந்த திமுக வேட்பாளர் சேகர்பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் இடையே நேருக்கு நேர் ஆவேசமான வாக்குவாதமும், இருதரப்புத் தொண்டர்களிடையே தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. இந்தத் திடீர் பதற்றமான சூழலைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். இந்த மோதலின் போது ஏற்பட்ட பதற்றத்தால் சினோரா அசோக்கிற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார்.
சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியானது இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழகத்தின் உற்றுநோக்கும் விஐபி தொகுதிகளில் ஒன்றாக மாறியிருந்தது. இத்தொகுதியில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வென்று வரும் திமுகவின் மூத்த நிர்வாகி சேகர்பாபுவை எதிர்த்து, தவெக சார்பில் சினோரா அசோக் களம் இறக்கப்பட்டிருந்தார்.






