இனிவரும் காலங்களில் தமிழக அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் அரசு மருத்துவமனைகளில்தான் கட்டாயம் சிகிச்சை பெற வேண்டும் என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் உறுதியளித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜ் பின் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் தூய்மையை மேம்படுத்துவது குறித்து முதலமைச்சரின் ஆலோசனையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற கட்டணங்களும் பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்பட்டு மக்கள் பணம் சுரண்டப்படும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் தரமான முறையில் கட்டணமின்றி வழங்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். “அரசு மருத்துவமனைகளை நாமே நம்பவில்லை என்றால் வேறு யார் நம்புவார்கள்?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்கள் முழு ஆத்ம திருப்தியுடன் திரும்பி செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் விரைவில் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.






