நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவில், அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு 47 இடங்களை மட்டுமே வென்றது. இதனால் அதிமுகவில் கடந்த சில தினங்களாக உட்கட்சி பிரச்சனை நீடித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.
இந்த சூழலில், முதல்வர் விஜயின் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று (13-05-26) சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், சி.வி.சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் 25 பேர், முதல்வர் விஜயின் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதே போல், எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான 22 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். தனது உத்தரவை மீறி வாக்களித்ததால், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 26 எம்.எல்.ஏக்களின் மாவட்டச் செயலாளர் பதவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தும் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று நாமக்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்தவர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் காவல்துறையினர் பலத்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் இரு பிரிவாக பிரிந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு உதவி ஆணையர், மூன்று இன்ஸ்பெக்டர், 9 எஸ்.ஐ, 35 காவலர்கள் என மொத்தமாக 50க்கும் மேற்பட்ட காவலர்கள் நேற்று இரவு முதல் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







