சேலம் ரயில்வே கோட்டத்தில் அபாய சங்கிலியை அவசியமின்றி இழுத்து ரயிலை நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் 57 முறை இந்த சம்பவம் நடந்து உள்ளதாக ரயில்வே துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ரயில்களில் தீ விபத்து, திருட்டு, வழிப்பறி, தவறி கீழே விழுதல் நிகழ்ந்தால் பயணிகள் ரயில் பெட்டிகளில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவது வழக்கம், ஆனால் சமீபகாலமாக அவசியமின்றி விளையாட்டாக ரயில்களில் அபாய சங்கிலியை பிடித்து இழுக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. அதன்படி சேலம் கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 57 முறை அபாய சங்கிலியை பிடித்து இழுத்து உள்ளனர்.
இது குறித்து சேலம் கோட்டை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறும்போது;
ரயில்வே பாதுகாப்பு படையினருடன் பயணச்சீட்டு பரிசோதகர்கள் இணைந்து ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதனை செய்ய இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக முன்பதிவு பெட்டிகளில் பயணம் சீட்டு இன்றி பயணிக்கும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் எடுத்துக் கொண்டு முன்பதிவு பெட்டிகளின் பயணித்த 1,076 பேர் எச்சரிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் முன் பதிவு இல்லா பெட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது போன்று ரயிலில் பயணச் சீட்டின்றி பயணம் செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ரயில்களில் அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் அபாய சங்கிலி அவசியமின்றி இழுத்து நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இது மற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் குறித்த நேரத்தில் ரயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அபாய சங்கிலியை இழுத்த சம்பவங்கள் 57 முறை அரங்கேறி உள்ளன. அதில் உரிய விசாரணை மேற்கொண்டதில் 42 சம்பவங்கள் முறையான காரணம் எதுவும் இன்றி நடந்து இருக்கிறது. இவ்வாறு காரணமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவோருக்கு ரயில்வே சட்டப்படி அபராதம், அல்லது ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.






