தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் புதிய சிறப்பு அதிரடிப்படை அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின்னர், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை செயல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் பதவியேற்ற தினத்தில் வெளியிடப்பட்ட கோப்புகளில் பெண்கள் பாதுகாப்புக்கான “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” உருவாக்கும் திட்டமும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் க. மணிவாசன் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முதன்மை இலக்காகக் கொண்டு இந்த படை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 காவல் கண்காணிப்பாளர் (SP)
2 துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DSP)
4 காவல் ஆய்வாளர்கள்
8 காவல் உதவி ஆய்வாளர்கள்
20 காவலர்கள்
என அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு படை, குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து தொடர்ந்து கண்காணிக்கும். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கிய பணியாகும். பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸ் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








