தமிழக முதல்வராக பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி, இலங்கை அதிபர், கர்நாடகா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.
மல்லிகார்ஜுன கார்கே: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு எனது வாழ்த்துகள். சுயமரியாதை, சமூகநீதி, அதிகாரம், பகுத்தறிவு சிந்தனை ஆகியவற்றின் நீடித்த வலிமையை இந்த அரசு உறுதிப்படுத்துகிறது.
ராகுல் காந்தி: தமிழகம் தேர்ந்தெடுத்து விட்டது ஒரு புதிய தலைமுறையை. ஒரு புதிய குரலை. முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் விஜய்க்கு எனது நல்வாழ்த்துகள்.
ரேவந்த் ரெட்டி: தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற விஜய், ஏழை எளியோருக்கான நலத்திட்டங்களையும், சமமான நீதியையும் வழங்கி, தமிழகத்தை வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார் என நம்புகிறேன்.
சித்தராமையா: இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும், மதச்சார்பின்மை, அரசியலமைப்பு விழுமியங்களை காக்கவும், பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிரான கூட்டு போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பவன் கல்யாண்: தமிழகத்தில் அமையவிருக்கும் புதிய அரசு, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி, வெளிப்படையான மற்றும் முற்போக்கான ஆட்சியை வழங்கி, தமிழகத்தை மேலும் வளர்ச்சியை நோக்கி வழிநடத்தும் என்று நம்புகிறேன். முதல்வராக பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்.
பினராயி விஜயன்: தமிழக மக்கள் ஜோசப் விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கை, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் பொது நலன் ஆகிய விழுமியங்களை நிலைநிறுத்தும் ஓர் ஆட்சி மாதிரியாக மாறும் என்று நம்புகிறேன்.
எல்.முருகன்: தமிழக மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் முன்னிறுத்தி, முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் சிறப்பாக செயலாற்ற வாழ்த்துகிறேன்.
சத்குரு: தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கும், மாநில மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில், வரவிருக்கும் புதிய ஆட்சிக்கும் எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நயினார் நாகேந்திரன்: மக்களின் நலனையும், மாநிலத்தின் முன்னேற்றத்தையும் முதன்மையாக கொண்டு, நலத்திட்டங்களை செயல்படுத்தி, சிறந்த ஆட்சியை வழங்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமதாஸ்: ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழக மக்களின் நலனையும், சமூக நீதியையும், வளர்ச்சியையும் முன்னிறுத்தி சிறப்பான ஆட்சியை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அன்புமணி: போதை இல்லாத, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழக்கூடிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய அரசு அமைய வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசு தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்.
கனிமொழி: தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஜோசப் விஜய்க்கும், பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள்.
திருமாவளவன்: தமிழக முதல்வராக பதவி ஏற்கும் தவெக தலைவர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
கி.வீரமணி: முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெ.சண்முகம்: மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவுடன் முதல்வர் பொறுப்பேற்று இருக்கும் தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்.
மு.வீரபாண்டியன்: மதச்சார்பற்ற, வேற்றுமையில் ஒற்றுமை பேணும் கொள்கை வழியில் நின்று, ஜோசப் விஜய்யின் சீரிய தலைமை, அதன் தேர்தல் கால வாக்குறுதிகளையும், முந்தைய அரசின் நலத்திட்டங்களையும் முன்னெடுத்து செல்வதில் வெற்றிபெறட்டும்.
ஜி.கே.வாசன்: காமராஜர், மூப்பனார் ஆகியோரது தாரக மந்திரமான வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதற்கு ஏற்ப ஜோசப் விஜய்யின் ஆட்சி நடைபெறட்டும்.
கமல்ஹாசன்: முதல்வர் விஜய்யின் தலைமைத்துவத்தில், தமிழகம் சிறக்கட்டும். புதிய உயரங்களை அடையட்டும்.
டிடிவி தினகரன்: தமிழகத்தில் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சீமான்: திமுக – அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.
ரவிபச்சமுத்து: தமிழகத்தில் வரலாற்று சாதனையை படைத்து, ஆட்சியை அமைத்திருக்கும் ஜோசப் விஜய்க்கு எனது வாழ்த்துகள்.
அண்ணாமலை:முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்களுடன் புரட்சி அண்ணா திமுக நிறுவனர் வா.புகழேந்தி, முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் சேது.கருணாஸ், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்..






