மார்க்சிஸ்ட், விசிக-விடம் ஆதரவு கேட்ட விஜய்

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன.தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்தது . இதில் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவீத வாக்குகள் பதிவானது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெளியிடப்பட்டது. இந்தத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவான தமிழக வெற்றிக் கழகம், நேற்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களை சமர்ப்பித்த பிறகே பதவியேற்பு நடத்தப்படும் என ஆளுநர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சேரக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்தது. தற்போது தவெக 107 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றதால், கூட்டணியின் மொத்த பலம் 112 ஆக உள்ளது.ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மைக்கு இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவை பெற தவெக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இதற்காக விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூ.கட்சித் தலைவர்களை தவெக எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசினர்.

அப்போது விசிக தலைவர் திருமாவளவன் இந்த முடிவை எடுத்தோம், கவுத்தோம் என்று செய்ய முடியாது. கலந்து ஆலோசித்து, நிதானமாக எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று கூறினார்.இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு கட்சிகளும் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பதால்,நேற்று திரென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர்.தவெகவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க, விசிக நிர்வாகிகள் இன்று சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர். தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் நிர்வாகக்குழு கூட்டமும் இன்று மாலை 3 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இதில் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.தவெகவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசிக்க, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு மற்றும் மாநிலக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, கூட்டணி நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட அரசியல் முடிவுகள் குறித்து இதில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.இந்த ஆலோசனைகளுக்கு பிறகு தான் தவெக ஆட்சி அமைக்க முடியுமா இல்லையா என்று முடிவு தெரியவரும்.