வரும் 30ம் தேதி கோவை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் பதவிக்கு மறைமுகத் தேர்தல்..!

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களின் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வருகிற மாா்ச் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் 96 வாா்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. எனவே, மண்டலத் தலைவா்கள் பதவிகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் மண்டல தலைவா்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் வருகிற மாா்ச் 30 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும். விருப்பமுள்ள வாா்டு உறுப்பினா்கள், தங்களது வேட்பு மனுக்களை அன்றைய தினம் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுவில் ஒரு வாா்டு உறுப்பினா் முன்மொழிய, மற்றொரு வாா்டு உறுப்பினா் வழிமொழிய வேண்டும். ஒரே ஒரு நபா் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தால் அவா் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவராக அறிவிக்கப்படுவாா். ஒன்றுக்கும் மேற்பட்டவா் வேட்புமனு தாக்கல் செய்தால், அந்த மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு உறுப்பினா்கள் ரகசியமாக வாக்களித்து, மண்டலத் தலைவா்களைத் தேர்வு செய்வாா்கள். இதுதவிர, மாநகராட்சியில் கணக்குகள் குழு, கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதான குழு, சுகாதாரக் குழு, வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு, நகரமைப்பு மற்றும் அபிவிருத்திக் குழு, பணிகள் குழு ஆகிய நிலைக் குழுக்கள் உள்ளன.

இந்த குழுக்களின் உறுப்பினா்கள் தோதல் வருகிற 30 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும். இதில் கணக்குகள் குழு, கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதான குழு, சுகாதார குழு ஆகிய குழுக்களில் தலா 9 உறுப்பினா்கள் தேர்வு செய்யப்பட உள்ளனா். இதில் தலா 5 உறுப்பினா்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி குழு, பணிகள் குழு ஆகிய குழுக்களுக்கு தலா 15 உறுப்பினா்கள் தேர்வு செய்யப்பட உள்ளனா். இதில் தலா 8 உறுப்பினா்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடா்ந்து 31 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கண்ட குழுக்களின் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அந்தந்தக் குழு உறுப்பினா்கள், குழுவின் தலைவா்களைத் தேர்வு செய்வாா்கள் என்றாா்.