தங்க குதிரையில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

மதுரை சித்​திரைத் திரு​விழா​வின் உச்ச நிகழ்ச்​சி​யான கள்​ளழகர் வைகை ஆற்​றில் இறங்​கும் வைபவம் நேற்று அதி​காலை 5.48 மணி​யள​வில் நடை​பெற்​றது.

கள்​ளழகர் பச்​சைப் பட்டு உடுத்தி தங்​கக் குதிரை வாக​னத்​தில் எழுந்​தருளி​னார். அப்​போது திரண்​டிருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்​தர்​கள் விண்​ண​திர ‘கோ​விந்​தா, கோவிந்​தா’ என முழக்​கமிட்டு தரிசனம் செய்​தனர்.மதுரை அழகர்​கோ​வில் சுந்​த​ரராஜப் பெரு​மாள் கோயில் சித்​திரைத் திரு​விழா கடந்த ஏப்​.27-ல் தொடங்​கியது. முதல் நாள், இரண்​டாம் நாள் மாலை​யில்சுந்​தர​ராஜப் பெரு​மாள் திருக்​கல்​யாண மண்​டபத்​தில் தோளுக்​கினி​யான் பல்​லக்​கில் சுவாமி எழுந்​தருளி​னார். மூன்​றாம் நாள் (ஏப்​.29) சுந்​தர​ராஜப் பெரு​மாள், மண்​டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்​ப​தற்​காக கள்​ளர் திருக்​கோலத்​தில் கள்​ளழக​ராக தங்​கப் பல்​லக்​கில் மதுரைக்கு புறப்​பட்​டார். வழிநெடு​கிலும் பல்​வேறு மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி​னார்.

நான்​காம் நாள் (ஏப்​.30) மதுரை மாநகர எல்​லை​யான மூன்​று​மாவடி​யில் அதி​காலை 5.30 மணி​யள​வில் கள்​ளழகருக்கு எதிர்​சேவை நடை​பெற்​றது. பின்​னர் புதூர் மாரி​யம்​மன் கோயில், ரிசர்வ் லைன் மாரி​யம்​மன் கோயில், அவுட்​போஸ்ட் மாரி​யம்​மன் கோயில், அம்​பல​காரர் மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி​னார். அன்​றிரவு 8.30 மணி​யள​வில் தல்​லாகுளம் பிரசன்ன வெங்​க​டாசலபதி கோயி​லில் எழுந்​தருளி​னார். அங்கு திரு​மஞ்​சன​மாகி தங்​கக் குதிரை வாக​னத்​தில் எழுந்​தருளி, ஸ்ரீ​வில்​லிபுத்​தூர் ஆண்​டாள் நாச்​சி​யார் சூடிக்​கொடுத்த பிரம்​மாண்ட மாலையை சூடிக்​கொண்​டார்.

ஐந்​தாம் நாளான நேற்று (மே 1) அதி​காலை கோயி​லிலிருந்து புறப்​பா​டாகி, தல்​லாகுளம் கருப்​பண​சாமி கோயில் முன் 2.30 மணி​யள​வில் ஆயிரம் பொன் சப்​பரத்​தில் எழுந்​தருளி​னார். அங்​கிருந்து ஆழ்​வார்​புரம் வைகை ஆறு நோக்கி தங்​கக் குதிரை வாக​னத்​தில் புறப்​பட்​டார். முன்​ன​தாக கள்​ளழகரை வரவேற்​கும் வகை​யில் எழுத்​தாணிக்​காரத்​தெரு வீர​ராகவ பெரு​மாள் வெள்​ளிக் குதிரை வாக​னத்​தில் வைகை ஆற்​றில் 4 மணி​யள​வில் எழுந்​தருளி​னார். ஆழ்​வார்​புரம் மண்​டகப்​படிகளில் கள்​ளழகர் அதி​காலை 4.42 மணிக்கு வந்​தடைந்​தார்.அங்கு பல்​வேறு மண்​டகப்​படிகளில் எழுந்​தருளி வைகை ஆற்​றுக்கு அதி​காலை 5.40 மணிக்கு வந்​தார். கோயில் நிர்​வாகம் சார்​பில் மனோரஞ்​சிதம், நாண​யங்​களு​டன் கூடிய 7 அடி நீள மாலை சாற்​றப்​பட்​டது. அப்​போது ஆற்​றுக்​குள் அவரை வீர​ராகவப் பெரு​மாள் எதிர்​கொண்டு வரவேற்க அதி​காலை 5.48 மணிக்கு கள்​ளழகர் பச்​சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்​றில் இறங்​கி​னார். அங்கு திரண்​டிருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்​தர்​கள் ‘கோ​விந்​தா.. கோவிந்​தா’ என விண்​ண​திர முழக்​கமிட்டு அழகரை தரிசித்​தனர்.

இந்​நிகழ்​வில் உயர் நீதி​மன்ற நீதிபதி புகழேந்​தி, அமைச்​சர் பி. மூர்த்​தி,அறநிலை​யத் துறை ஆணை​யர் , மதுரை மாவட்ட ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநக​ராட்சி ஆணை​யர் சித்​ரா, மாநகர் காவல் ஆணை​யர் அபிஷேக் தீக்​சித், திண்​டுக்​கல் மாவட்ட ஆட்​சி​யர் சரவணன், சு.வெங்​கடேசன் எம்​.பி., எம்​எல்​ஏக்​கள் ராஜன்​ செல்​லப்​பா, அய்​யப்​பன் ஆகியோர் பங்​கேற்​றனர்.பின்​னர் வைகை ஆற்​றி​லிருந்து கள்​ளழகர் 7.35 மணி​யள​வில் ராம​ராயர் மண்​டகப்​படிக்​குப் புறப்​பட்​டார். அங்கு நேர்த்​திக்​கடன் செலுத்த ஏராள​மான பக்​தர்​கள் நாலாபுற​மும் துருத்​தி​யில் தண்​ணீர் பீய்ச்சி அடித்து கள்​ளழகரை குளிர்​வித்​தனர். இரவு வண்​டியூர் வீர​ராகவப் பெரு​மாள் கோயி​லில் தங்​கி​னார்.

இன்று (2-ம் தேதி) தேனூர் மண்​டகப்​படி​யில் மண்​டூக முனிவருக்கு சாப​விமோசனம் அளிக்​கிறார். இரவு ராம​ராயர் மண்​டபத்​தில் விடிய விடிய தசாவ​தா​ரம் நடை​பெறும். நாளை ராம​ராயர் மண்​டகப்​படியி​லிருந்து அனந்​த​ராயர் பல்​லக்​கில் ராசாங்க திருக்​கோலத்​தில் ராம​நாத​புரம் மன்​னர் சேதுபதி மண்​டபம் செல்​கிறார். மறு​நாள் அங்​கிருந்து அதி​காலை 2.30 மணி​யள​வில் பூப்​பல்​லக்​கில் கள்​ளழகர் திருக்​கோலத்​தில் எழுந்​தருள்​கிறார்.

தொடர்ந்து கருப்​பண​சாமி கோயில், தல்​லாகுளம் பெரு​மாள் கோயி​லில் எழுந்​தருளி மலைக்​குத் திரும்​பு​கிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணி​யள​வில் கோயிலை அடைகிறார். மே 6-ம் உற்சவ சாந்​தி​யுடன் திரு​விழா நிறைவு​பெறுகிறது. விழாவுக்​கான ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் ரா.ஹரிஹரன் தலை​மை​யில் கோயில் பணி​யாளர்​கள் செய்து வரு​கின்​றனர்.

ஆண்​டு​தோறும் கள்​ளழகர் வைகை ஆற்​றில் இறங்​கும்​போது எந்த நிறத்​தில் பட்டு உடுத்தி இறங்​கு​கிறார் என மக்​கள் எதிர்​பார்ப்​போடு இருப்​பார்​கள். கடந்த சில ஆண்​டு​களாகவே கள்​ளழகர்பச்​சைப் பட்டு உடுத்தி இறங்​கு​வதைப்​போல் இந்​தாண்​டும் பச்​சைப் பட்டு உடுத்தி இறங்​கி​னார். இதனால் நடப்​பாண்​டும் நல்ல மழைப் பொழிந்து பயிர்​கள் விளைந்து விவ​சா​யம் செழிக்​கும் என்​பது பக்​தர்​களின் நம்​பிக்​கை​யாக உள்​ளது.