மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள 142 தொகுதிகளின் தயார்நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கொல்கத்தாவிற்கு உட்பட்ட மூன்று தேர்தல் மாவட்டங்களின் மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மத்தியப் படைத் தளபதிகள் பங்கேற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிதல், சிவில் மற்றும் காவல்துறை நிர்வாகத்திற்கு இடையிலான தகவல் தொடர்பை வலுப்படுத்துதல் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினரின் நடமாட்டத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் காக்ட்வீப் பகுதிக்குச் சென்ற மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். கள்ள ஓட்டு போடுவது அல்லது வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது போன்ற செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படாது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். வாக்குச்சாவடிகளில் மத்தியப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். வாக்குச்சாவடியைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் தேவையற்ற நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்காளர்கள் அச்சமின்றி வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்” என்றார்.







