“திமுக கூட்டணியில் 21 கட்சிகள் இணைந்துள்ளன. ஒரு நல்ல ஆட்சியை கொடுத்துவிட்டால் கூட்டணியில் இவ்வளவு கூட்டம் தேவையில்லை” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெக-வை சுற்றி நிறையச் சர்ச்சைகள் நடக்கிறது. ஒரு தவறை உணர்ந்து ஏற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்வதற்கு மனப்பக்குவம் தேவை. அது தான் மனிதப் மாண்பு.
கரூரில் நடந்த நிகழ்வுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என விஜய் சொல்கிறார். ஆனால், அவர் அங்கு வரவில்லை என்றால் கூட்டம் வந்திருக்காது. கூட்டம் இல்லையென்றால் நெரிசல் இருந்திருக்காது. நெரிசல் இல்லை என்றால் உயிரிழப்புகள் நடந்திருக்காது. இவற்றுக்கு எல்லாம் முதன்மையான காரணி யார்? அவர் தானே. தெரியாமல் நடந்துவிட்டது, அதுக்கு நானும் ஒரு பொறுப்பாகி விட்டேன். இதனால் நான் என் மக்களிடம் மிகுந்த மனத்துயரத்தோடு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று விஜய் கூறியிருந்தால் அது முடிந்திருக்கும். ஆனால், “என் மேல் பழியைப் போட்டுவிட்டீர்கள்” என விஜய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அது சரியல்ல. தவெக கட்சியில் கட்டுப்பாடு இல்லை. கொள்கைக்காக ஒரு கூட்டம் கூடும் போது அங்கு ஒழுங்கு இருக்கும்.அது இல்லை என்று வரும் போது நெரிசலாகிவிடும். விஜய் தான் கட்சி பொறுப்பாளர்களை அழைத்துப் பேசி ஒழுங்குபடுத்தி சரி செய்ய வேண்டும்.






